கீழ மைக்கேல்பட்டி புனித வனத்து சின்னப்பர் ஆலயத்தில் ஆடம்பர தேர் பவனி
- கீழ மைக்கேல்பட்டி புனித வனத்து சின்னப்பர் ஆலயத்தில் ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது
- இவ்விழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் கலந்துகொண்டு புனித வனத்து சின்னப்பருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே பிரசித்தி பெற்ற புனித வனத்து சின்னப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த 22-ந் தேதி அருட்தந்தை இன்னோசென்ட் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, தினசரி திருப்பலி, நவநாள் திருப்பலி, தவ நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழா தொடங்கிய நாள் முதல் விருந்து உபசரிப்பு நிகழ்வு நடைபெற்றது. இதற்காக காட்டுக்குள் உள்ள முந்திரி மரங்களுக்கு கீழே கறி விருந்து சமைத்து உறவினர்களை அழைத்து விருந்து உபசரிப்பது நடைபெற்றது.
இதில் விருந்தினர்கள் மட்டுமின்றி ஆலயத்திற்கு வரும் யார் வேண்டுமானாலும் அந்த விருந்தில் கலந்து கொண்டு உணவு உண்ணலாம். காட்டு திருவிழா என்று அழைக்கப்படும் வனத்து சின்னப்பர் ஆலய திருவிழாவில் பாரம்பரிய மனம் மாறாமல் பல ஆண்டுகளாக இந்த விருந்தோம்பல் நடைபெற்று வருவது இந்த விழாவின் சிறப்பு ஆகும்.விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி காலை திருப்பலி மற்றும் பெருவிழா திருப்பலியும், இரவு தேவ நற்கருணை ஆசீர்வாதமும் நடந்தது.
இரவு 12 மணியளவில் ஆடம்பர தேர்பவனியை குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி, அருட்தந்தைகள் ஜான் கென்னடி, சதீஷ் ஏசுதாஸ் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட சப்பரத்தில் புனித வனத்து சின்னப்பர், ஆரோக்கிய அன்னை மற்றும் சம்மனசு ஆகியோர் எழுந்தருளினர்.இவ்விழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் கலந்துகொண்டு புனித வனத்து சின்னப்பருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.
பின்னர் வாணவேடிக்கை மற்றும் பேண்டு வாத்தியம் முழங்க திருத்தேர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, தா.பழூர் செல்லும் சாலை வழியாக கீழ மைக்கேல் பட்டி புனித மைக்கேல் அதிதூதர் ஆலய வாயிலை சென்றடைந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை கீழமைக்கேல்பட்டி பங்கு தந்தை அடைக்கலசாமி மற்றும் ஊர் நாட்டாமைகள் மற்றும் பொதுமக்கள் செய்தனர்.