உள்ளூர் செய்திகள் (District)

அரசு பள்ளியில் தேசிய கணித தின விழா

Published On 2022-12-23 09:46 GMT   |   Update On 2022-12-23 09:46 GMT
  • கணித பாடத்தை சிறப்பாக கற்றுக் கொண்டால் அனைத்து சாதனைகளை நிகழ்த்த முடியும்
  • அரசு பள்ளியில் தேசிய கணித தின விழா நடைபெற்றது.

அரியலூர் :

அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய கணித தின விழா நடைபெற்றது. இதில் அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் ஜெயா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: இருக்கும் பாடங்களிலேயே எளிமையான பாடம் கணித பாடம். அதனை சிறப்பாக கற்றுக் கொண்டால் அனைத்து சாதனைகளையும் நிகழ்த்த முடியும். கணிதத்தை ஆர்வமுடன் கற்க வேண்டும் என்றார். தொடர்ந்து, கணிதத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பள்ளி சார்பில் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார். அரியலூர் அரசு கலைக் கல்லூரி கணித பேராசிரியர் கண்ணன் பேசுகையில், தேசிய கணித தினமானது சீனிவாச ராமானுஜன் அவர்களின் பிறந்த தின விழா தேசிய கணித தினமாக கொண்டாடுகின்றோம். எந்தவித வசதிகளும் இல்லாத காலகட்டத்தில் ராமானுஜன் கணிதத்தின் மீது இருந்த ஆர்வத்தால் பல புதிய கண்டுப்பிடிப்புகளை கண்டறிந்தார். உலகிற்கு கணித பெருமைகளை விளக்கிய தமிழர் ஆவார். நீங்களும் அவரைப் போன்று கணிதத்தில் ஆர்வம் கொண்டு படித்து பல புதிய படைப்புகளை உருவாக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் அம்பிகா மாரிமுத்து, துணைத் தலைவர் பழனியம்மன் ராஜதுரை, பள்ளி மேலாண்மை குழு தலைவர் அகிலா, கல்வி ஆர்வலர் கருணாநிதி, பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு தலைவர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தனலட்சுமி, ரமேஷ், பத்மாவதி, தங்கபாண்டி, கோகிலா மற்றும் இளநிலை உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.


Tags:    

Similar News