அரியலூர் புத்தக திருவிழாவில் அடுப்பில்லா சிறுதானிய உணவு கண்காட்சி
- அரியலூர் புத்தக திருவிழாவில் அடுப்பில்லா சிறுதானிய உணவு கண்காட்சி நடைபெற்றது
- சிறுதானியங்களைக் கொண்டு அடுப்பில்லாமல் சமைக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை கண்காட்சியில் வைத்திருந்தனர்.
அரியலூர்:
அரியலூர் அரசு மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவின் 5-ம் நாளான நேற்று அடுப்பில்லா சிறுதானிய உணவு வகைகளின கண்காட்சி நடைபெற்றது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் இந்த கண்காட்சியில், கலந்து கொண்ட அங்கன்வாடிகளைச் சேர்ந்த பணியாளர்கள், கம்பு சேமியா, ராகி புட்டு, எள் உருண்டை, குதிரைவாலி பொங்கல், சுண்டல், பாசிப்பயிறு பாயசம், நிலக்கடலை லட்டு, கொள்ளு சுண்டல் உள்ளிட்ட சிறுதானியங்களைக் கொண்டு அடுப்பில்லாமல் சமைக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை கண்காட்சியில் வைத்திருந்தனர்.
இதனை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகண்ணன் உள்ளிட்டோர் பார்வையிட்டு சிறந்த படைப்புகளுக்கு பரிசுகளை வழங்கினர்.மேலும் இக்கண்காட்சியை பார்வையிட்ட மாணவர்களிடம், நமது முன்னோர்கள் உட்கொண்ட சிறுதானிய உணவுகளை மறந்து, ருசிக்கு முக்கியத்துவம் கொடுத்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் துரித உணவுகளை அதிகம் உட்கொள்கின்றோம். இதனால், ஊட்டச்சத்து பற்றாக்குறை உயரத்துக்கு ஏற்ற எடையின்மை, ரத்த சோகை, வயதுக்கு ஏற்ற உயரமின்மை போன்றவையால் பாதிப்பு அடைகிறோம்.
எனவே, இளம்பருவத்திலுள்ள மாணவ, மாணவியர் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி, பருப்பு, பழங்கள், சிறுதானிய உணவு வகைகளைஅதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.மாலையில் நடைபெற்ற விழாவில், சிறப்பாக சிறுதானியத்தில் உணவு சமைத்த அங்கன்வாடியைச் சேர்ந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.