உள்ளூர் செய்திகள்

ஆதாருடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- தொல்.திருமாவளவன் எம்.பி.வேண்டுகோள்

Published On 2022-11-26 09:23 GMT   |   Update On 2022-11-26 09:23 GMT
  • ஆதாருடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்
  • தவறான முறையில் மின்விநியோகம் இருக்கக் கூடாது

அரியலூர்:

அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழா நடைபெற்றது, பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் கீதாராணி வரவேற்று பேசினார், திருமாவளவன்எ எம்.பி கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, கண்ணன், நகராட்சி தலைவர் சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எதிர்க்கட்சியாக நாங்கள் தான் செயல்படுகிறோம் என்பதை காட்டிக்கொள்ளவே எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்துள்ளார். எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி, நாங்கள் தான் எதிர்க்கட்சியாக செயல்படுகிறோம் என்ற முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. அ.தி.மு.க. தலைமைக்கு எதிராக அ.தி.மு.க.விலேயே விமர்சனங்கள் எழுகின்ற நிலையில், இந்த சந்திப்பை எடப்பாடி பழனிச்சாமி நடத்தி இருப்பதாக நினைக்கிறேன்.

தவறான முறையில் மின்விநியோகம் இருக்கக் கூடாது. அனைவருக்கும் மின்விநியோகம் வழங்க வேண்டும் என்ற முயற்சியின் காரணமாகவே ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு எதிர்பார்த்த ஒன்றுதான். ஜல்லிக்கட்டை மீட்டெடுக்கும் வகையில் மக்கள் போராட்டம் தொடரும். தமிழக அரசின் சட்ட போராட்டத்தின் மூலம், நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை காப்பாற்ற எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News