தென்காசியில் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியில் கலை நிகழ்ச்சிகள்
- கண்காட்சியில் ஒவ்வொரு நாளும் பள்ளி, கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
- நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 16-ந்தேதி முதல் தொடங்கி நாளை (25-ந்தேதி) வரை நடக்கிறது.
ஒவ்வொரு நாளும் பள்ளி, கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. 8-ம் நாள் நிகழ்ச்சியில் ஜே.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக 10 மாணவ-மாணவிகளின் தனி நடனம், ஜோடி நடனம், பாடல் மற்றும் நாகரீக நடை ஆகிய நிகழ்ச்சிகளும், வைசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் சார்பாக மாணவ- மாணவிகள் 65 பேர் பங்குபெற்றனர்.
இதில் இறைவனை வணங்கும் விதமாக பிராத்தனை நடனம், தமிழை வாழ்த்த தாயே தமிழே நடனம், பெண்மையின் பெருமையை போற்றும் பெண்மை நடனம், உழவுக்கும்,உழவனுக்கும் உயிர் கொடுக்க ஏர் நடக்கும் நடனம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. கல்லூரி ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் உட்பட பலர் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர்.
நிகழ்ச்சி யில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு கேடயம் மற்றும் நற்சான்றிதழை வைசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி முதல்வர் வெள்ளைதுரை பாண்டியன், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன், ஆகியோர் வழங்கினர். மேலாண்மை இயக்குனர் வெள்ளத்தாய், கல்லூரி முதல்வர் ஈஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.