கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்: 250 தன்னார்வலர்களுக்கு பயிற்சி- கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் தொடங்கி வைத்தார்
- ரேசன் குடும்ப அட்டை வாரியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் விண்ணப்பப் படிவம் வழங்கப்பட உள்ளது.
- கணக்கெடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த செயல்முறை விளக்கம் நடைபெற்றது.
பொன்னேரி:
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற யார்-யார் தகுதியான வர்கள் என்ற விதிமுறை களையும் ஏற்கனவே அரசு அறிவித்து உள்ளது. இதைத் தொடர்ந்து ரேசன் குடும்ப அட்டை வாரியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் விண்ணப்பப் படிவம் வழங்கப்பட உள்ளது. இந்த பணியை மேற்கொள்ள தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பொன்னேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் தேர்வு செய்யப்பட்ட தன்னார்வலர்கள் சுமார் 250 பேருக்கு திருவள்ளூர் மாவட்ட வருவாய் துறை சார்பில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்த பயிற்சி கூட்டம் நடைபெற்றது.
இதனை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதி உள்ளவர்கள் தகுதி இல்லாதவர்கள் குறித்த விளக்கமும், கணக்கெடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த செயல்முறை விளக்கம் நடைபெற்றது.
இதில் பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன், தாசில்தார் செல்வகுமார், துணை தாசில்தார் சிவகுமார், இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.