களக்காடு அருகே மாற்றுத்திறனாளி பெண் மீது தாக்குதல்- என்ஜினீயர் மீது வழக்கு
- வேல்ராணி தனது தாயாருடன் வசித்து வருகிறார்.
- வேல்ராணி சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சீவலப்பேரி தெற்கு தெருவை சேர்ந்தவர் மணி மகள் வேல்ராணி ( வயது 40). இவர் மாற்றுத் திறனாளி. திருமணமாகாத இவர் தனது தாயாருடன் வசித்து வருகிறார்.
இவரது வீட்டிற்கு அருகில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து மின் சப்ளை கொடுக்க ப்பட்டுள்ளது. இந்நிலையில் வேல்ராணி யின் சகோதரி ராஜலெட்சுமியின் மகன் அஜெய்செல்வனை, அதே ஊரை சேர்ந்த ரங்கேஷ் தாக்கியதாக வேல்ராணி தரப்பினர் களக்காடு போலீசில் புகார் செய்தனர்.
இதனையறிந்த ரங்கேஷின் நண்பரான பணகுடி பேரூராட்சியில் என்ஜினீயராக உள்ள சரவணனின் தந்தை முத்துபாண்டி, வேல்ராணியின் உறவினரிடம் சென்று வேல்ராணி வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கினால் மின் வாரியத்தினர் அபராதம் விதித்து விடுவார்கள் என்பதால் மின் இணைப்பை துண்டிக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து வேல்ராணியின் வீட்டி ற்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து வேல்ராணி, முத்துபாண்டியிடம் சென்று மின் இணைப்பை துண்டிக்க செய்து விட்டீர்களே என்று தட்டிக் கேட்டார். அப்போது அங்கு வந்த சரவணன் எனது தந்தையிடம் தகராறு செய்கிறாயா என்று கூறி வேல்ராணியை கம்பால் தலையில் தாக்கினார்.
இதில் காயமடைந்த வேல்ராணி சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி இதுதொடர்பாக சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.