நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வேளாண் கண்காட்சி, விவசாயிகள் கருத்தரங்கு
- உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப் படுத்துவதற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
- கண்காட்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு பாரம்பரிய முறையில் சிறுதானிய உணவு வழங்கப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து நடத்திய உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப் படுத்துவதற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
வேளாண்மை துணை இயக்குனர் நாச்சிமுத்து வரவேற்றார். நாமக்கல் வட்டார அட்மா குழு தலைவர் பழனிவேல், மோகனூர் வட்டார அட்மா குழு தலைவர் நவலடி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வேளாண்மை இணை இயக்குநர் துரைசாமி தலைமை தாங்கினார்.
உயிர், உயிரியல் இடுபொருட்கள் விற்பனை இயக்குநர் ஷாலினி இயற்கை வேளாண்மையின் உன்னதங்கள், இயற்கை விதை உற்பத்தியாளர் ஆனந்த் சிறுதானியம், அருந்தானிய விதைகள் மற்றும் சாகுபடி, கொல்லிமலைசாரல் உழவர் உற்பத்தியாளர் நிறுவனர் ஆறுமுகம் இயற்கை இயைந்த வாழ்வு குறித்து பேசினர்.
கருத்தரங்கில் வேளாண்மை அறிவியல் நிலைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகுதுரை, உதவி பேராசிரியர்கள் முருகன் (உழவியல்), சங்கர் (பூச்சியியல்), சத்யா (மண்ணியல்), பால்பாண்டி (மீன்வளம்) ஆகியோர் இயற்கை முறை பயிர் சாகுபடி முறைகள் குறித்தும், சிறுதானியங்களின் முக்கியத்துவம், பாரம்பரிய ரகங்களை பிரபலப்படுத்துதல் குறித்தும் விளக்கி பேசினர்.
கண்காட்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு பாரம்பரிய முறையில் சிறுதானிய உணவு வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் கலையருவி கிராமிய கலைக்குழுவினர் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரங்கள் வழங்கினர். விவசாயிகள் தங்களது சந்தேகங்களை கூறி விளக்கம் பெற்றனர்.
இதில் வேளாண்மை உழவர் நலத்துறையின் அலுவலர்கள், சகோதரத் துறையின் அலுவலர்கள், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு உழவன் செயலி குறித்து விளக்கம் அளித்து பதிவேற்றம் செய்தனர்.
உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் தனலட்சுமி நன்றி கூறினார்.