உள்ளூர் செய்திகள்

காங்கயம் அருகே சிறுவன் மாயம் 3-வது நாளாக தேடும் பணி தீவிரம்

Published On 2023-02-04 05:34 GMT   |   Update On 2023-02-04 05:34 GMT
  • அதிர்ச்சி அடைந்த மஞ்சுளா அவர்களது உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகனை தேடி உள்ளார்.
  • ரிதனின் புகைப்படத்தை போலீசார் சமூகவலைதளங்களில் பதிவிட்டும் தேடி வருகின்றனர்.

காங்கயம்:

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ஏ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் ( வயது 30) ,லாரி டிரைவர். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 3½ வயதில் ரிதன் என்ற மகன் உள்ளார்.

சிறுவன் மாயம்

இந்நிலையில் மஞ்சுளா தனது மகன் ரிதனுடன் அதே பகுதியில் உள்ள அவரது தோழி வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். பின்னர் மாலை அவர்களது வீட்டிற்கு செல்ல ஆயத்த மானபோது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த ரிதன் திடீரென மாய மானான். இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சுளா அவர்களது உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகனை தேடி உள்ளார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் சிறுவன் மாயமான சம்பவம் குறித்து காங்கேயம் போலீ சில் புகார் செய்தனர்.

தேடுதல் வேட்டை

இதையடுத்து அங்கு வந்த காங்கேயம் டி.எஸ்.பி., முத்து குமரன் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட போலீசார் அங்குள்ள அனைத்து வீடுகள், வீட்டு மொட்டைமாடி, கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட பல இடங்களில் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் தேடுவதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் போலீசாருடன் இணைந்து காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் 3 மணி நேரத்துக்கு மேலாக ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

போலீசார் விசாரணை

நேற்று முன்தினம் முதல் இன்று வரை தேடியும் ரிதனை கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் எங்கு சென்றான் , யாராவது அவனை கடத்தி சென்றா ர்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காங்கயம் ஏ.சி.நகர் பகுதியில் உள்ள கிணறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் ரிதன் கிடைக்காததால் அவனை மர்மநபர்கள் கடத்தி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகி க்கின்றனர். இதையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

பி.ஏ.பி. வாய்க்கால்

இதனிடையே ரிதன் விளையாடிய இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் பி.ஏ.பி. வாய்க்கால் செல்கிறது. இதனால் ரிதன் அங்கு சென்றதன் காரணமாக தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டிருக்கலாமா என்று போலீசார் விசாரணை நடத்தி பி.ஏ.பி., வாய்க்கால் பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரிதனின் புகைப்படத்தை போலீசார் சமூகவலைதளங்களில் பதிவிட்டும் தேடி வருகின்றனர்.

வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த சிறுவன் மாயமான சம்பவம் காங்கயம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.    

Tags:    

Similar News