உள்ளூர் செய்திகள் (District)

கோவை அரசு ஆஸ்பத்திரி அருகே அதிக சத்தத்துடன் ஏர்ஹாரன் ஒலிக்க விடும் பஸ்கள்

Published On 2023-04-28 09:37 GMT   |   Update On 2023-04-28 09:37 GMT
  • ஒரு நாளைக்கு சராசரியாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் அரசு ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர்.
  • ஏர் ஹாரன் சத்தங்கள் நோயாளிகளின் நெஞ்சை பதற வைக்கிறது.

குனியமுத்தூர்.

கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு எதிர்புறம் பஸ் நிலையம் உள்ளது. அனைத்து பஸ்களும் இங்கு வந்து திரும்பிச் செல்லும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் இங்கு வந்து இறங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வது வழக்கம். ஒரு நாளைக்கு சராசரியாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் அரசு ஆஸ்பத்திரிக்கு வருவதும் அங்கிருந்து சிகிச்சை முடிந்து வெளியேறுவதும் வழக்கம்.

இந்நிலையில் அரசு ஆஸ்பத்திரிக்கு எதிர்புறம் உள்ள பஸ் நிலையத்தில் தனியார் பஸ்களும்,

அரசு பஸ்களும் போட்டி போட்டுக் கொண்டு ஏர் ஹாரன்களை ஒலிக்கின்றனர். அந்த பஸ் நிலையத்தின் பரப்பளவு மிகவும் குறைவானதாகும். ஒரு பஸ் வெளியே சென்றால் மட்டுமே, பின்னால் வரும் அடுத்த பஸ் வெளியேற முடியும் .

டைமிங் பிரச்சினை காரணமாக ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்வது அங்கு வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனால் ஏர்ஹாரன் சத்தம் அந்த இடத்தில் எந்த நேரமும் ஒலித்துக் கொண்டிருப்பதை காண முடிகிறது. இந்த சத்தம் காரணமாக அங்கு வரும் நோயாளிகளுக்கு பதட்டம், மன அழுத்தம் ஏற்படும் நிலை உள்ளது.

இது குறித்து நோயாளிகள் கூறுகையில், இவர்கள் அடிக்கும் ஏர்ஹாரன் பிரசவ வார்டு வரை கேட்கிறது. பொதுவாக சிகிச்சையில் இருக்கும் நோயாளியிடம் சத்தமாக பேசக்கூடாது என்று கூட மருத்துவர்கள் அறிவுறுத்துவது வழக்கம். ஆனால் இந்த ஏர் ஹாரன் சத்தங்கள் நோயாளிகளின் நெஞ்சை பதற வைக்கிறது. டிரைவர்கள் இதனை புரிந்து கொண்டு செயல்பட்டால் மட்டுமே நல்லது என்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பொதுவாக நகர்ப்புற எல்லைக்குள் ஏர்ஹாரன் அடிக்க கூடாது என்று வட்டாரப் போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளது. ஆனாலும் அதையும் மீறி ஒரு சில டிரைவர்கள் இவ்வாறு செயல்பட்டு வருகிறார்கள். அவ்வாறு செயல்படும் டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வட்டாரப் போக்குவரத்து துறையினரும் போக்குவரத்து போலீசாரும் இதனை அன்றாடம் கண்காணிக்க வேண்டும். அவ்வாறு கண்காணிக்கும் பட்சத்தில் நகர்ப்புற எல்லைக்குள் அமைதியான பயணத்தை மேற்கொள்ளலாம் என கூறினர்.

Tags:    

Similar News