உடன்குடியில் இருந்து சென்ற ஈரோடு, கோவை, நாகர்கோவில் பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு
- தடம் எண் 70 சி என்ற அரசு பஸ் உடன்குடி, பெரியதாழை, உவரி வழியாக நாகர்கோவில் சென்றது.
- 3 பஸ்களையும் மீண்டும் இதேவழி தடத்தில் விடவேண்டும் என்று உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் மனு கொடுத்தார்.
உடன்குடி:
உடன்குடியில் இருந்து தினசரிமாலை 5.15 மணிக்கு தடம் எண் 624 என்ற ஈரோடு விரைவு அரசு பஸ் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டது.
இந்த பஸ் சாத்தான்குளம், நெல்லை, மதுரை, வழியாக சென்றது. இதைப் போல உடன்குடியில் இருந்து தினசரி மாலை 5:20க்கு தடம் எண் 632 என்ற அரசு விரைவு பஸ் கோவைக்கு பல ஆண்டுகளாக ஓடியது. திருச்செந்தூர் தூத்துக்குடி, மதுரை வழியாக சென்றது.
அதைப்போல திருச்செந்தூரில் தினசரி அதிகாலை 5 மணிக்கு புறப்பட்ட தடம் எண் 70 சி என்ற அரசு பஸ் சீர்காட்சி, பிச்சிவிளை, உடன்குடி, பெரியதாழை, உவரி வழியாக நாகர்கோவில் சென்றது.
மீண்டும் இதே வழிதடத்தில் திருச்செந்தூருக்கு வந்துவிட்டு திருச்செந்தூரில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு இதே வழித்தடத்தில் நாகர்கோவில் சென்று திரும்பிவரும். இந்த மூன்று பஸ்களும் திடீரென நிறுத்தப்பட்டது.
இதனால்இந்த பஸ்சை நம்பி பயணம் செய்த சுற்றுப்புறப் பகுதியில் உள்ள கிராமமக்கள், விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த 3 பஸ்களையும் மீண்டும் இதேவழி தடத்தில் விடவேண்டும் என்று உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் இது சம்பந்தமாக அதிகாரிகளுடன் கலந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.