சுந்தராபுரத்தில் பூட்டிய வீட்டிற்குள் பிணமாக கிடந்த கார் டிரைவர்
- வீட்டில் இருந்து பரபரப்பு கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது
- ராஜ்குமார் வீட்டிற்குள் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
குனியமுத்தூர்,
சிவகங்கை மாவட்டம் கோட்டையிருப்பை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது45).
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை தேடி கோவைக்கு வந்துள்ளார்.
இங்கு அவருக்கு கார் டிரைவர் வேலை கிடைத்ததை தொடர்ந்து சுந்தராபுரம் அடுத்த கணேசபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். தினமும் வேலைக்கு சென்று விட்டு, வீட்டிற்கு வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக ராஜ்குமாரின் வீடு பூட்டியே கிடந்தது. அவர் ஊருக்கு சென்றிருப்பார் என அக்கம்பக்கத்தினர் நினைத்தனர்.
ஆனால் சம்பவத்தன்று காலை வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சியான அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து, வீட்டின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர்.
அவர் விரைந்து வந்து பார்த்தார். வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
இதனால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது ராஜ்குமார் வீட்டிற்குள் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ராஜ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான காரணத்தை அறிய வீடு முழுவதும் சோதனை செய்தனர். அப்போது கடிதம் ஒன்று இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். அதில் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை என்று மட்டும் எழுதி இருந்தது. போலீசார் அதனை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து, அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.