கோவையில் ரவுடியை 3 நாள் காவலில் எடுத்து போலீஸ் விசாரணை
- கோகுல் கொலை வழக்கில், ரவுடி கவுதமுக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
- 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க ரத்னபுரி போலீசார் திட்டமிட்டனர்.
கோவை,
கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரத்தை சேர்ந்தவர் கவுதம் (வயது28). ரவுடியான இவர் மீது கோவை நகரில், 15-க்கும் மேற்பட்ட அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
கோவை கோர்ட்டு அருகே நடந்த கோகுல் கொலை வழக்கிலும், ரவுடி கவுதமுக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
பல்வேறு வழக்குகளில் ஜாமீனில் வெளியே வந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
இதையடுத்து போலீசார் ரவுடி கவுதமை தேடி வந்தனர். இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு கவுதம் சென்னையில் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர்.
பின்னர் அவர் புழல் ஜெயிலில் இருந்து கோவை மத்திய ஜெயிலுக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் ரவுடி கவுதமிடம் விசாரணை நடத்த வேண்டி, அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க ரத்னபுரி போலீசார் திட்டமிட்டனர். இதற்காக ஜே.எம்.3 கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, ரவுடி கவுதமை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கொடுத்தார். இதையடுத்து போலீசார் ரவுடி கவுதமை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.