உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் மக்களை தேடி மருத்துவம் திட்ட பயனாளிகளுடன் கலெக்டர் கலந்துரையாடல்

Published On 2022-11-28 08:49 GMT   |   Update On 2022-11-28 08:49 GMT
  • மக்களை தேடி மருத்துவத்திட்டம் தங்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கிறது
  • நீலகிரி மாவட்டத்தில் மக்களைத்தேடி மருத்துவ திட்டம் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டத்திற்குட்பட்ட அருவங்காடு பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகளை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

மக்களை தேடி மருத்துவத்திட்டம் தங்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கிறது, நோயின் தம்மை மற்றும் அதற்காக வழங்கப்படும் மருந்துகள், மக்கள் நலப்பதிவில் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனரா, தேவையான மருந்துகள் இல்லங்களுக்கு பணியாளர்கள் மூலம் கொண்டு வந்து தரப்படுகின்றதா என்பது குறித்து அவர் கேட்டறிந்தார்.

பின்னர் கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் மக்களைத்தேடி மருத்துவ திட்டம் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 218 பெண் சுகாதார தன்னார்வலர்கள், 5 நோய் ஆதரவு செவிலியர் மற்றும் 5 இயன்முறை மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். 128 இடைநிலை சுகாதார சேவையாளர்கள் மற்றும் 61 பல்நோக்கு சுகாதார ஆய்வாளர்கள் மூலம் வழங்கப்படும் அனைத்து தொற்றா நோய்க்கான சேவைகளும் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நமது மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையான 7,29,576-ல் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5,53,019 ஆவர். இதில் தொற்றா நோய்களுக்கான பரிசோதனை பெற்றவர்கள் 4,95,213 நபர்கள், உயர் ரத்த அழுத்த நோய் கண்டறியப்பட்டு மருந்து பெட்டகம் பெற்றவர்கள் 21,143 நபர்கள், நீரிழிவு நோய் நோயாளிகள் கண்டறியப்பட்டு மருந்து பெட்டகம் பெற்றவர்கள் 6,113 நபர்கள் மற்றும் 6,137 நபர்கள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் கண்டறியப்பட்டு மருந்து பெட்டகங்களையும் இத்திட்டத்தின் மூலம்பெற்றுள்ளனர்.

மேலும், ஒவ்வொரு பயனாளியும் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் மக்கள் நலபதிவில் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இத்திட்டம் துவங்கப்பட்டு இதுவரை உயர் ரத்த அழுத்த நோய்சிகிச்சைக்காக 27,792 நபர்களும், நீரிழிவு நோய்க்காக 10,025 நபர்களும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்காக 9,414 நபர்களும், நோய் ஆதரவு சிகிச்சை 2,657 நபர்களும், இயன்முறை சிகிச்சை 2,424 நபர்களும், வாய் புற்று நோய் சிசிச்சை 10 நபர்களும், மார்பக புற்று நோய் சிகிச்சை 74 நபர்களும், கர்ப்பபை வாய் புற்றுநோய் சிகிச்சை 22 நபர்களும் என மொத்தம் 52,418 நபர்கள் முதன்முறையாக சேவை பெற்றுள்ளனர். இதைத் தவிர தொடர் சேவையாக 1,35,987 நபர்களும் பயனடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பயனடைந்த பயனாளி கேசவன் தெரிவித்ததாவது:

எனக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது. இதற்காக நான் தொடர்ந்து மாத்திரை எடுத்து வருகிறேன். முன்பெல்லாம் ஒரு மாதத்திற்கு ஒரு முறை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று தேவையான மருந்து மாத்திரைகளை வாங்கி வருவேன். சில நேரங்களில் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தேன்.

தற்பொழுது மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் எனக்கு தேவையான மருந்துகளை வீட்டிற்கே வந்து தருகின்றனர். எனக்கு இது மிகவும் பயனள்ளதாக இருக்கிறது. எங்களை போன்ற வயதானவர்களுக்கு இதுபோன்ற திட்டத்தினை துவக்கி வைத்து மிகச்சிறப்பாக செயல்படுத்திய முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பயனாளி ஆறுமுகம் தெரிவித்ததாவது:-

நான் அருவங்காடு எம்.ஜி காலனி பகுதியில் செல்வி ஹோம் நீட்ஸ் பக்கத்தில் குடியிருந்து வருகிறேன். எனக்கு 3 வருட காலமாக உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளது. எனவே தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். ஒவ்வொரு முறையும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பரிசோதனை செய்து மருந்து மாத்திரை வாங்கி வருவேன். சில நேரங்களில் மாத்திரை வாங்க முடியாத காரணத்தினால் தொடர்ந்து சாப்பிட முடியாமல் சிரமப்பட்டு வந்தேன். தற்பொழுது தமிழ்நாடு முதல்-அமைச்சர் மக்களை தேடி மருத்துவ திட்டத்தினை துவக்கி வைத்ததின் மூலம் எனக்கு தேவையான மருந்து மாத்திரைகளை களப்பணியாளர்கள் நேரடியாக வீட்டிற்கே கொண்டு வந்து தருகின்றனர்.

இதனால் நான் சரியான முறையில் மாத்திரைகள் உட்கொண்டு, தற்போது நலமுடன் இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News