பாளை வாலிபர் கொலையில் கைதான தங்கை கணவர் வாக்குமூலம்
- தகராறு முற்றியதில் கணேஷ் கைலாஷ் அங்கிருந்த கிரைண்டர் கல்லை எடுத்து சுரேஷ் தலையில் போட்டு கொலை செய்தார்.
- சம்பவத்தன்று குடித்துவிட்டு வந்த சுரேஷ், அங்கிருந்த எனது மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் அரிவாளின் பின்பகுதியால் அடித்து துன்புறுத்தி உள்ளார்.
நெல்லை:
பாளை கோட்டூர் ரோடு திருஞானசம்பந்தர் நாயனார் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி சுப்புலட்சுமி.
உடல்நிலை பாதிப்பு
இவர்களுக்கு சுரேஷ்(வயது 35) என்ற மகன், உமா என்ற மகள் உள்ளனர். மணிமூர்த்தீஸ்வரத்தை சேர்ந்த சண்முகம் மகன் கணேஷ் கைலாஷ் என்பவருடன் உமாவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
கணேஷ் கைலாஷ் தனியார் தண்ணீர் கேன் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார்.கடந்த சில நாட்களாக சுப்புலட்சுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளதால், உமா தனது தாய் வீட்டுக்கு சென்று கவனித்து வந்துள்ளார்.
கொலை
இந்நிலையில் சுரேஷ் குடித்துவிட்டு வந்து நேற்று இரவு வீட்டில் தகராறு செய்துள்ளார். தகவல் அறிந்த கணேஷ் கைலாஷ் அங்கு சென்று சமாதானம் பேசி உள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு முற்றியதில் கணேஷ் கைலாஷ் அங்கிருந்த கிரைண்டர் கல்லை எடுத்து சுரேஷ் தலையில் போட்டு கொலை செய்தார்.
இதுதொடர்பாக பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசிவம் வழக்குப்பதிவு செய்து கணேஷ் கைலாசை கைது செய்தார். அவர் போலீசில் வாக்குமூலமாக கூறியதாவது:-
அடித்து துன்புறுத்தினார்
சுரேஷ் சரிவர வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு தகராறு செய்து வந்தார். அவர் கோவில்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் சுரேசின் தொந்தரவால் அவரது மனைவி குழந்தையுடன் கோவில்பட்டிக்கு சென்றுவிட்டார்.
எனது மாமனார் இறந்துவிட்டதால் அவருக்கு வந்த ஓய்வூதிய தொகையை குடும்பத்திற்கு செலவிடாமல் குடித்துவிட்டு தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று குடித்துவிட்டு வந்த சுரேஷ், அங்கிருந்த எனது மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் அரிவாளின் பின்பகுதியால் அடித்து துன்புறுத்தி உள்ளார்.
இதனை எனக்கு போன் செய்து எனது குழந்தைகள் அழுது கொண்டே தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அங்கு சென்று அவரை சத்தம்போட்டேன். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் முற்றியதில் கொலை செய்துவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.