தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
- தாரமங்கலத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி ஆணையாளர் அதிரடி நடவடிக்கையால் பறிமுதல் செய்தனர்.
- அந்த கடைகளுக்கு அபராதமாக ரூ. 6500 விதித்தனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் நகராட்சி பகுதியில் தடை செய்யபட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளதாக தொடர்ந்து அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் முஸ்தபா நகராட்சி பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டார்.
அப்போது அண்ணாசிலை , பேருந்து நிலையம், தேர் நிலையம் ஓமலூர் மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் சோதனையிட்டதில் மளிகை கடை, ஓட்டல், டீ க்கடை .வணிக வளாகம் ஆகிய இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை பறிமுதல் செய்தனர். அந்த கடைகளுக்கு அபராதமாக ரூ. 6500 விதித்தனர்.
மேலும் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுபற்றி நகராட்சி ஆணையாளர் முஸ்தபா கூறுகையில்,
நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு அரசு தடை விதித்து உள்ள நிலையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.
தொடர்ந்து இதுபோன்ற சோதனைகள் அடிக்கடி நடைபெறும். தொடர்ந்து பயன்படுத்தும் கடைகளை கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கவும், கடையின் உரிமத்தை ரத்து செய்யவும் வாய்ப்பு உள்ளதால் வியாபாரிகளும் , பொதுமக்களும் நகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.