உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திண்டுக்கல் மாவட்டத்தில் மழைக்கால நோய்கள் பரவாமல் தடுக்க கலந்தாய்வு கூட்டம்

Published On 2022-08-23 05:00 GMT   |   Update On 2022-08-23 05:00 GMT
  • திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மழைக்கால நோய்கள் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
  • நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், போர்க்கால அடிப்படையில் சீரமைத்திட வேண்டும் என்றார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மழைக்கால நோய்கள் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

மழைக்காலங்களில் பல்வேறு நோய்கள், கொசு உற்பத்தி மூலம் வரக்கூடிய டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. இந்த மழை கால நோய்கள் குறித்த அறிகுறிகளை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யக்கூடிய மழைநீர் தேங்கக்கூடிய பொருட்களை கண்டறிந்து அப்புறப்படுத்த வேண்டும்.

மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் வரும் நபர்களை உடனுக்குடன் கண்டறிந்து, மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து உடனுக்குடன் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல்களை பதிவேற்றம் செய்திட வேண்டும். தனியார் மருத்துவமனைகளும் இதுகுறித்த விபரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

கிராம ஊராட்சி செயலர்கள், தங்கள் பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு ஏதேனும் இருந்தால் உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் காய்ச்சல் பாதித்த பகுதிகள், வயிற்றுப்போக்கு, டைபாய்டு மற்றும் தொற்றுநோய் உள்ளவர்களின் விபரங்களை அறிந்து உடனடியாக பொது சுகாதாரத்துறையுடன் இணைந்து, கொசுப்புழு மருந்து தெளிக்கும் பணியினை துரிதப்படுத்த வேண்டும்.

அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் பொது இடங்கள், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களில் கொசு உற்பத்தியாகாமல் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

கிணறு மற்றும் டேங்கர் வாகனங்கள் மூலமாக விநியோகிக்கப்படும் தண்ணீரிலும் குளோரின் கலந்து விநியோகிக்க வேண்டும். இதனை களப்பணியாளர்கள் முறையாக உறுதிப்படுத்த வேண்டும். குடிநீர் விநியோகிக்கப்படும் தொட்டிகள், குடிநீர் குழாய்கள் போன்றவற்றில் உடைப்போ, பழுதோ இருக்கும்பட்சத்தில் தண்ணீர் வீணாவதுடன், கொசுப்புழு உற்பத்தியாகி நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், போர்க்கால அடிப்படையில் சீரமைத்திட வேண்டும் என்றார்.

Tags:    

Similar News