உள்ளூர் செய்திகள்

பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள் - பொதுமக்கள் அச்சம்

Published On 2022-12-25 09:52 GMT   |   Update On 2022-12-25 09:52 GMT
  • காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்து வனக்குழுவினரிடம் கேட்டறிந்தார்.
  • தாசம்பட்டி வனப்பகுதிக்குள் மீண்டும் விரட்டியடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

பென்னாகம்,

கர்நாடகா மற்றும் ஓசூர் வனப்பகுதிகளில் இருந்து வழி தவறிய மக்னா மற்றும் ஆண் யானை உள்ளிட்ட இரண்டு காட்டு யானைகள் தருமபுரி மாவட்டம் சஞ்சீவராயன் மலை வழியாக பிக்கிலி வனப்பகுதியை ஒட்டியுள்ள நாகதாசம்பட்டி அருகே தொட்டில்பள்ளம் கிராமப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக முகாமிட்டுள்ளது.

இந்த இரண்டு காட்டு யானைகளும் இரவு நேரங்களில் தொட்டில் பள்ளம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்துள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தொட்டில் பள்ளம் பகுதிக்கு வந்த வனத்துறையினர் பட்டாசு மற்றும் தகர பெட்டிகளைக் கொண்டு அதீத ஒலியின் எழுப்பியவாறு காட்டு யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டியுள்ளனர். இவ்விரு யானைகளும் பகலில் வனப்பகுதியிலும், இரவு நேரங்களில் மீண்டும் கிராமப் பகுதிக்குள் நுழைகின்றது.

இந்த நிலையில் இரவு நேரங்களில் கிராமப் பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க பாலக்கோடு வனத்துறையின் சார்பில் வனவர்கள் முனுசாமி, கனகராஜ் ஆகியோருடன் 8 வனத்துறையினர் அடங்கிய குழுவினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வரும் வனத்துறையினரின் நடவடிக்கைகளை உதவி வன பாதுகாப்பு அலுவலர் வில்சன் பார்வையிட்டு, காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்து வனக்குழுவினரிடம் கேட்டறிந்தார்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்:- கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இவ்விரு காட்டு யானைகளும் பாப்பாரப்பட்டி, சுரக்காய் பட்டி, மண்ணேரி, தாசம்பட்டி உள்ளிட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் அடிக்கடி உணவு தேடி நுழைந்தது. காட்டு யானைகளை வனக் குழுவினர் தாசம்பட்டி வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

பின்னர் மீண்டும் நாகதாசம்பட்டி தொட்டில்பள்ளம் கிராம பகுதிக்குள் உணவு தேடி நுழைந்துள்ளது. தற்போது காட்டுயானைகளின் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காட்டு யானைகளை மொரப்பூர் பீட் தாசம்பட்டி வனப்பகுதிக்குள் மீண்டும் விரட்டியடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

வனப்பகுதியில் இருந்து இரவு நேரங்களில் உணவு தேடி தொட்டில்பள்ளம் கிராம பகுதிக்குள் நுழைந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளால் எவ்வித உயிரிழப்பு நிகழ்வதற்கு முன்பு

வனத்துறையினர் யானைகளை மீண்டும் கிராமப் பகுதிக்குள் நுழையாதவாறு அடர் வனப்பகுதிக்கு கொண்டு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News