சேலம் புதிய பஸ் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
- தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை கடந்த 4 நாட்களாக கொண்டாடப்பட்டது.
- தற்போது பொங்கல் விடுமுறை முடிந்தது. இதையொட்டி சொந்த ஊருக்கு வந்தவர்கள் மீண்டும் தாங்கள் பணி செய்யும் இடத்திற்கு திரும்பி வருகின்றனர்.
சேலம்:
தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை கடந்த 4 நாட்களாக கொண்டாடப்பட்டது. தொடர் விடுமுறையை யொட்டி வெளியூர்களில் தங்கி பணி செய்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், உறவினர்கள் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
தற்போது பொங்கல் விடுமுறை முடிந்தது. இதையொட்டி சொந்த ஊருக்கு வந்தவர்கள் மீண்டும் தாங்கள் பணி செய்யும் இடத்திற்கு திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக நேற்று மாலை முதல் சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகளவில் இருந்தது.
வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதால் பஸ் நிலையத்தில் பஸ்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்பட்டது. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக சென்னை, வேலூர், விழுப்புரம், திருச்சி, கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு மிக அதிகப்படியான மக்கள் பயணம் செய்தனர். நள்ளிரவு 1 மணி வரை பயணிகளின் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. அதற்கு ஏற்ப பஸ்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.
இதேபோல் இன்று அதிகாலை வெளியூரில்களில் இருந்து வந்த பயணிகளின் கூட்டமும் அதிகளவில் காணப்பட்டது. விடுமுறைக்கு சென்றவர்கள் பணிக்கு திரும்பியதால், புதிய பஸ் நிலைய பகுதியில் உள்ள ஓட்டல்களில் விற்பனை களைக்கட்டியது.