உள்ளூர் செய்திகள்

நாளை மறுநாள் தீபாவளி கொண்டாட்டம்- நெல்லை மாவட்டத்தில் 2,500 போலீசார் பாதுகாப்பு

Published On 2023-11-10 08:58 GMT   |   Update On 2023-11-10 08:58 GMT
  • நெல்லை மாநகர பகுதியில் ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
  • போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் 1,500 போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை:

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

அலைமோதும் கூட்டம்

இதனால் நெல்லை மாநகர பகுதியில் ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மாவட்டத்திலும் வள்ளியூர், அம்பை, திசையன்விளை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பஜார் பகுதிகளில் கடைகளில் தீபாவளி விற்பனை களை கட்டியுள்ளது.

2,500 போலீசார் பாதுகாப்பு

இதனையொட்டி கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவதை தவிர்க்கும் விதமாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது. போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் 1,500 போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாநகர பகுதியில் கமிஷனர் மகேஷ்வரி தலைமையில் 1,000 போலீசார் பாளை, சமாதானபுரம், வண்ணார்பேட்டை, டவுன், ரதவீதிகள் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க வண்ணார்பேட்டையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த ஏற்பாடுகளை நெல்லை கிழக்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் ஆதர்ஷ் பசேரா ஆய்வு செய்தார். வண்ணார்பேட்டையில் இருந்து கொக்கிரகுளம் செல்லும் சாலை மற்றும் முருகன்குறிச்சி செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஜவுளிக்கடைகளுக்கு செல்பவர்களுக்கு பிளாஸ்டிக் பேரிகார்டுகள் அமைத்து தனி நடைபாதை உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து துணை கமிஷனர் ஆதர்ஷ் பசேரா கூறியதாவது:-

வண்ணார்பேட்டை பகுதியில் 30 காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காமிராக்களின் இயக்கத்தை ஆய்வு செய்துள்ளேன். அதில் சில காமிராக்கள் பழுதாகி உள்ளது. அதனை சரி செய்வதற்கு குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.

மேலும் கண்காணிப்பு கோபுரம் அமைத்து கண்காணிக்கவும், கூடுதலாக சில இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு ரேடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் கூட்ட நெரிசலில் குழந்தைகள் தவறிவிடும்போது அவர்களை கண்டுபிடிக்க வண்ணார்பேட்டை பாலத்தின் கீழே உதவி மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

29 சி.சி.டி.வி. காமிராக்கள் பழுது

வண்ணார்பேட்டையில் சாலையின் இருபுறங்களிலும் சுமார் 30 சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் நிலையில் அதில் ஊசிகோபுரம் ஆலயத்தை நோக்கி அமைந்துள்ள ஒரே ஒரு சி.சி.டி.வி. காமிரா மட்டுமே இயங்கி வருகிறது. இதனை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் பார்த்த துணை கமிஷனர் ஆதர்ஷ் பசேரா அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்துவிடம் இதுகுறித்து கேட்டார். அப்போது அவர் இந்த கட்டுப்பாட்டு மையம் மாநகர குற்றப்பிரிவு போலீசாரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. உடனடியாக சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். 

Tags:    

Similar News