திருவள்ளூர், ஆர்.கே.பேட்டை அருகே ஆக்கிரமித்து கட்டிய 50 வீடுகள் இடித்து அகற்றம்
- நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை பலகை வைத்தனர்.
- வீடுகள் கட்டி வரும் பயனாளிகள் கதறி அழுதனர்.
திருவள்ளூர்:
ஆர்.கே.பேட்டை தாலுகா எஸ்.வி.ஜி.புரம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 100 பேருக்கு கடந்த 2000-ம் ஆண்டு திருத்தணி ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் மூலம் பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பட்டா வழங்கி பல ஆண்டுகளாகியும், ஒரு சிலர் மட்டுமே அப்பகுதியில் வீடு கட்டினர். இதற்கிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வருவாய்த் துறையினர் இலவச வீட்டுமனைகள் வழங்கப்பட்ட இடம் அரசுக்கு சொந்தமானது அந்த இடத்தில் யாரும் வீடுகள் கட்டக்கூடாது என்றும் மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை பலகை வைத்தனர்.
எனினும் வீட்டுமனை பட்டா பெற்றுள்ள பயனாளிகள் வீடுகள் கட்டிக்கொள்ள அனுமதி வழங்க கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு வழங்கி இருந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை ஆர்.கே.பேட்டை தாசில்தார் விஜயகுமார் தலைமையில் வருவாய் துறையினர் 6 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அனுமதியின்றி அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை இடித்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வீடுகள் கட்டி வரும் பயனாளிகள் கதறி அழுதனர்.
சுமார் 50-க்கும்மேற்பட்ட வீடுகள் இடித்து தரைமட்ட மாக்கப்பட்டது. திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் எஸ்.வி.ஜி.புரத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்புணியில் ஈடுபட்டனர்.