தேவாலா பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா
- காலை 7 மணிக்கு பால்குட ஊர்வலம், காப்பு கட்டுதல் நடைபெற்றது.
- கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காலை முதலே கோவிலுக்கு பந்தலூர், தேவாலா உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேவாலா அட்டியில் பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
இதனையொட்டி நேற்று மாலை 3 மணிக்கு ஆற்றில் இருந்து முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.மாலை 6 மணிக்கு முதல் யாக பூஜை, விக்னேஸ்வரர் பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இரவு 9 மணிக்கு சுவாமிகளுக்கு பாபணாபிஷேகம், கோபுர கலசம் வைத்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும் நடைபெற்றது.
சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று நடந்தது. காலை 6.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து காலை 7 மணிக்கு பால்குட ஊர்வலம், காப்பு கட்டுதல் நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர்.
காலை 9.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாக சாலையில் இருந்து கலசங்கள் எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
பின்னர் கோ பூஜையும், சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காலை முதலே கோவிலுக்கு பந்தலூர், தேவாலா உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் கும்பாபிஷேகத்தை பார்த்து, சாமி தரிசனம் செய்து சென்றனர்.