ஆக்கிரமிப்புகளை தடுக்க கூவம், அடையாறு ஆறுகளில் டிஜிட்டல் மூலம் கணக்கெடுப்பு
- டிஜிட்டல் முறையை பயன்படுத்தி ஆறுகளை கணக்கெடுப்பதன் மூலம் ஆற்றின் எல்லைகளை வரைபடமாகவும் தயாரிக்க முடியும்.
- சென்னையில் கூவம் ஆற்று பகுதியில் உள்ள பெரும்பாலான ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.
சென்னை:
கூவம், அடையாறு ஆறுகளில் நீர்வழிப்பாதைகளை கண்காணிக்க டிஜிட்டல் மூலம் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள நீர் வளத்துறை திட்டமிட்டு உள்ளது.
ஆற்றின் எல்லைகளை மிகவும் துல்லியமாக கண்காணிக்க டி.ஜி.பி.எஸ். எனப்படும் டிபரன்ஷியல் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் பயன்படுத்தப்பட உள்ளது.
டிஜிட்டல் முறையை பயன்படுத்தி ஆறுகளை கணக்கெடுப்பதன் மூலம் ஆற்றின் எல்லைகளை வரைபடமாகவும் தயாரிக்க முடியும்.
ஆறுகள் மற்றும் அது தொடர்பான திட்டங்களை நிர்வகிக்கும் குழுவினர் எதிர்காலத்தில் ஆறு பகுதிகளை யாராவது ஆக்கிரமித்தால் அதை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியும். இதன்மூலம் ஆக்கிரமிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுக்க முடியும்.
சென்னையில் கூவம் ஆற்று பகுதியில் உள்ள பெரும்பாலான ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். கோர்ட்டு வழக்குகள் காரணமாக இன்னும் 1000 ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளன. இந்த டிஜிட்டல் முறை அமலுக்கு வந்தால் ஆக்கிரமிப்பு பிரச்சினை இருக்காது. இந்த பணிகளுக்கு விரைவில் டெண்டர் விடப்பட்டு உள்ளது. அதன்பிறகு ஆறுகளின் எல்லைகளை அளவிடும் பணி துரிதப்படுத்தப்படும்.
நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்கவும், நீர்த்தேக்க செயல்பாடுகளை கண்காணிக்கவும் மொபைல் செயலியும் உருவாக்கப்பட்டு வருகிறது.