திண்டுக்கல்லில் சர்வதேச யோகா தினத்தில் மாணவ-மாணவிகள் அசத்தல்
- சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் விளையாட்டு அரங்கில் யோகாதினவிழா நடைபெற்றது.
- இதில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளும், 350-க்கும் மேற்பட்ட கோர்ட்டு ஊழியர்களும் கலந்து கொண்டனர்
திண்டுக்கல்:
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் யோகாசன சங்கம் சார்பில் விளையாட்டு அரங்கில் யோகாதினவிழா நடைபெற்றது.
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஜி.சுந்தர்ராஜன் இதனை தொடங்கி வைத்தார். துணை மேயர் ராஜப்பா, விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமா மேரி, யோகாசனசங்க ஒருங்கிணை்பபாளர் ராஜகோபால், செயலாளர் நித்யாராஜேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
யோகாசனம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துக்கூறினர். இதில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விதவிதமான ஆசனங்களை செய்து காட்டினர்.
அவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதேபோல ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு யோகா பயிற்சி நடைபெற்றது.
உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நடந்த இந்த முகாமில் மாவட்ட முதன்மை நீதிபதி லதா தலைமையில் நீதிபதிகள் மோகனா, சரவணன், ஜான்வினோ, விஜயகுமார், பாரதிராஜா மற்றும் நடுவர்கள், வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் என 350-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பரபரப்பான பணிகளில் ஈடுபடும் கோர்ட்டு ஊழியர்கள் யோகாசன பயிற்சியில் ஈடுபட்டு மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.