உள்ளூர் செய்திகள்

தமிழகத்திற்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்: பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

Published On 2024-07-23 16:24 GMT   |   Update On 2024-07-23 16:24 GMT
  • சிறு கடைகள், வியாபாரம், சிறு தொழில்கள் போன்றவைகளுக்கு ஜிஎஸ்டி என்பது வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகும் நிலையுள்ளது.
  • வேலை வாய்ப்பை உருவாக்க கூடிய அளவு எந்த ஒரு மிகப்பெரிய தொழிற்சாலைகளும், தொழில் நிறுவனங்களும் தமிழகத்திற்கு வராததும் பெரும் ஏமாற்றம்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு அறிவித்துள்ள 2024-2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழகத்திற்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்திருக்கிறது. பெயரளவில் கூட தமிழ்நாடு என்ற ஒரு சொல் கூட பட்ஜெட் வாசிப்பில் இல்லை.

பீகாருக்கும், ஆந்திர பிரதேசத்திற்கு தரும் முக்கியத்துவம் எந்த ஒரு வகையிலும் ஒரு சதவீதம் கூட தமிழகத்திற்கு தரவில்லை என்பது கண்டனத்திற்குறியது.

அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே ஜிஎஸ்டி (GST) மற்றும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பல்வேறு விதமான துன்பங்களை மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் ஜிஎஸ்டி வரியை ஓரளவு குறைந்தாலும், விசைத்தறிகள், சிறு, குறு வியாபாரம் மற்றும் பல்வேறு விதமான தொழிற்சாலைகளை சேர்ந்தவர்களுக்கு அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்.

மேலும் சிறு கடைகள், வியாபாரம், சிறு தொழில்கள் போன்றவைகளுக்கு ஜிஎஸ்டி என்பது வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகும் நிலையுள்ளது. எனவே ஜிஎஸ்டியை திரும்பப் பெறுவது குறித்து எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டிக்கு மத்திய பட்ஜெட்டில் புதிதாக விவசாயத்திற்கோ, ரெயில்வே துறையிலையோ, சாலைகளுக்கோ என எந்தவொரு அறிவிப்பும் இல்லை என்பது வேதனை அளிக்கிறது.

வேலை வாய்ப்பை உருவாக்க கூடிய அளவு எந்த ஒரு மிகப்பெரிய தொழிற்சாலைகளும், தொழில் நிறுவனங்களும் தமிழகத்திற்கு வராததும் பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கிறது.

எனவே "ஒரு கண்ணில் வெண்ணையும்", "ஒரு கண்ணில் சுண்ணாம்பும்" வைத்து தமிழகத்தை மட்டும் வஞ்சிக்கக்கூடிய பட்ஜெட்டாக தமிழக மக்களாகிய நாங்கள் பார்க்கிறோம். இது பெரும் கண்டனத்துக்குரிய மத்திய பட்ஜெட் ஆகும்.

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News