உள்ளூர் செய்திகள்

மது போதையில் இருந்த ரேசன் கடை பணியாளர் 'சஸ்பெண்டு'

Published On 2024-07-31 08:02 GMT   |   Update On 2024-07-31 08:02 GMT
  • போதையில் இருந்த பணியாளர் கடையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
  • பொதுமக்களுக்கு பொருட்கள் எதுவும் வழங்காமல் போதையில் படுத்து உறங்கிவிட்டார்.

தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை 22-வது வார்டுக்கு உட்பட்ட சொர்ணநாதன் தெரு பகுதியில் அமுதம் நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை மூலம் அப்பகுதியை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட ரேசன் கார்டுதாரர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர்.

இந்த கடையில் நித்திய ராஜ் என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். இதற்கிடையே நித்தியராஜ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமான போதையில் கடைக்கு பணிக்கு வந்துள்ளார். மேலும் அவர் பொதுமக்களுக்கு பொருட்கள் எதுவும் வழங்காமல் போதையில் படுத்து உறங்கிவிட்டார்.

நியாய விலை கடைக்கு ரேசன் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பல முறை அழைத்தும் அவர் எழுந்திருக்கும் நிலையில் இல்லை. இச்சம்பவம் அறிந்த நகர் மன்ற உறுப்பினர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

புகார் கூறப்பட்ட ஊழியர் நித்தியராஜ் பல மாதங்களாக ரேசன் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களிடம் தரக்குறைவாக நடந்து வந்துள்ளார். இதையடுத்து உடனடியாக போதையில் இருந்த பணியாளர் கடையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதுகுறித்து செய்தி வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலானது. தகவல் அறிந்த தமிழ் நாடு குடிமைப்பொருள் விநியோக மண்டல மேலாளர் அருண் பிரசாத் விசாரணை நடத்தி பணி நேரத்தில் போதையில் தூங்கிய நியாய விலைக் கடை ஊழியர் நித்தியராஜை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News