உள்ளூர் செய்திகள்

கபிஸ்தலத்தில் முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு உருவச்சிலையை எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்து பேசினார்.

வேளாண்துறை அமைச்சராக இருந்தபோது பல்வேறு சாதனைகள் புரிந்தவர் துரைக்கண்ணு- எடப்பாடி புகழாரம்

Published On 2023-05-16 09:14 GMT   |   Update On 2023-05-16 09:14 GMT
  • மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு எளிமையாக வாழ்ந்தவர்.
  • விவசாயிகள் குறைகளை ஜெயலலிதாவிடம் பேசி உடனடியாக தீர்வு கண்டவர்.

மெலட்டூர்:

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலத்தில் மறைந்த முன்னாள் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு உருவ சிலை திறப்புவிழா முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

இதில் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு உருவ சிலையை திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு எளிமையாக வாழ்ந்தவர். அனைத்து தரப்பு மக்களிடமும் எளிமையாக அணுக கூடியவர்.

தனக்காக எந்த சிபாரிசும், உதவியும் அவர் கேட்டதில்லை. தனது தொகுதி மக்களுக்கான நியாயமான சிபாரிசுகளை மட்டுமே அவர் அமைச்சராக இருக்கும் போது என்னிடம் கேட்பார்.

மேலும் அவர் இந்த பகுதி மக்களுக்காக ஆற்றிய பணிகள் ஏராளம். முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு சிலையை திறப்பதற்கு தடையை ஏற்படுத்தியவர் தான் வைத்தியலிங்கம்.

தற்போது அவருடைய சிலையை மக்களின் பேராதரவோடும், அ.தி.மு.க.வின் தொண்டர்கள் ஆதரவோடும் திறந்து வைத்துள்ளேன்.

பாபநாசம் தொகுதியை பொறுத்தவரை ஒரு தொண்டனாக இருக்க வேண்டுமென நினைத்தவர் தான் துரைக்கண்ணு . அவர் வேளாண்துறை அமைச்சராக இருந்தபோது பல்வேறு சாதனைகளை புரிந்தவர்.

விவசாய குடும்பத்தில் பிறந்தவராக இருந்ததால், விவசாயிகள் குறைகளை ஜெயலலிதாவிடம் பேசி உடனடியாக தீர்வு கண்டவர்.

அவரது சிலையை திறந்து வைப்பதை பாக்கியமாக கருதுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

முடிவில் இளைஞர் இளம்பெண்கள் மாவட்ட செயலாளர் துரை.சண்முகபிரபு நன்றி கூறினார்.

முன்னதாக கபிஸ்தலம் வந்த எடப்பாடி பழனிச்சா மிக்கு மறைந்த இரா.துரைக்கண்ணு குடும்பத்தினர், அ.தி.மு.க கட்சி நிர்வாகிகள் சார்பில் கேரளா செண்டை மேளம் முழங்க கதக்களி நடனம், மயிலாட்ட்டம், ஒயிலாட்டம், தாரை, தப்பட்டைகள் அடித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

விழாவில் , முன்னாள்,அமைச்சர்கள் தமிழ்மகன் உசேன், முனுசாமி, வேலுமணி, சீனிவாசன், விஜயபாஸ்கர், ஓஎஸ்.மணியன், முன்னாள் எம்.பி பாரதிமோகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமநாதன், தவமணி, இளமதி சுப்ரமணியன், ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, ஓ.ஏ.ராமச்ச ந்திரன், கோபிநாதன், எம்.ஜி.ஆர் இளைஞரணி சதீஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் மோகன், முன்னாள் மயிலாடுதுறை தொகுதி எம்.பி. ஆர். கே. பாரதி மோகன், கும்பகோணம் ஒன்றிய கழகச் செயலாளரும் நிலவள வங்கி தலைவருமான சோழபுரம் அறிவழகன், திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலை வருமான ஏ.வி.கே அசோக்குமார், திருப்பன ந்தாள் வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி, திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் சுப்பு அறிவழகன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் பாலமுருகன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் ரகுவரன் , சாக்கோட்டை சபேசன் என்கிற சத்தியநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பானுமதி துரைக்கண்ணு, துரை.சண்முகபிரபு மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News