நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய,விடிய மழை: மாணவர்கள் அவதி
- பாபநாசம் அகஸ்தியர் அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
- கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று அம்பை, ராதாபுரம், சேரன்மகாதேவி, களக்காடு, மூலைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டியது. அம்பை, ராதாபுரம் பகுதிகளில் பிற்பகலில் தொடங்கி இரவு வரை பரவலாக மழை பெய்தது.
ராதாபுரத்தில் அதிகபட்சமாக 19 மில்லிமீட்டரும், அம்பையில் 13 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
சேரன்மகாதேவி, முக்கூடல், கோபாலசமுத்திரம், மேலச்செவல், பத்தமடை, வீரவநல்லூர், திருக்குறுங்குடி உள்ளிட்ட இடங்களிலும் சாரல் மலை பெய்த வண்ணம் இருந்தது. இன்று காலை முதலே வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று பகலில் தொடங்கி இரவு வரையிலும் கனமழை பெய்தது.
பாபநாசத்தில் 23 மில்லிமீட்டரும், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகள் பகுதிகளில் 19 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
நம்பியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் 17 மில்லிமீட்டரும், கொடுமுடியாறு அணை பகுதியில் 5 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. பாபநாசம் அகஸ்தியர் அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
நெல்லை மாநகர பகுதியில் நெல்லை, பாளையங்கோட்டையில் நேற்று பகலில் வானம் மேக மூட்டமாக காட்சியளித்த நிலையில், பிற்பகலில் வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு கனமழை பெய்தது.
சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. பாளையங்கோட்டையில் 13.20 மில்லிமீட்டரும், நெல்லையில் 8.20 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.
இன்று காலையில் இருந்து மாவட்டம் முழுவதும் மழை பரவலாக பெய்த நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்கள் என்று பெற்றோர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் மாவட்டத்தில் வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டதால் கடும் அவதிக்கு இடையே மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடி பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றதை பார்க்க முடிந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், காயல்பட்டி னம், சாத்தான்குளம், குலசேகரன்பட்டினம் ஆகிய இடங்களில் நேற்று பிற்பகலில் தொடங்கி இன்று அதிகாலை வரையிலும் கனமழை பெய்தது.
திருச்செந்தூர் மற்றும் குலசேகரன்பட்டினத்தில் இன்று காலையிலும் மீண்டும் மழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது.
காலை நிலவரப்படி அதிகபட்சமாக திருச்செந்தூரில் 6 சென்டிமீட்டரும், குலசேகரன்பட்டினத்தில் 5 சென்டிமீட்டரும் மழை பதிவாகியிருந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
திருச்செந்தூரில் சாக்கடை மற்றும் மழைநீர் கலந்து வடிகாலில் அதிகமான தண்ணீர் கடலுக்கு சென்றது. திருச்செந்தூரில் பெய்த கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மழை பெய்த நிலையில், பள்ளி மாணவ-மாணவிகள் குடை பிடித்தும், சில மாணவிகள் மழையில் நனைந்தும் மிகவும் சிரமப்பட்டு பள்ளிக்கு சென்றனர்.
குலசேகரன்பட்டினம் பகுதியில் விடிய, விடிய மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்சி அடைந்தனர். பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம் உட்பட 18 ஊராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 9 மணியை கடந்தும் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
உடன்குடி, குலசை, பரமன்குறிச்சி பஜார் பகுதியில் மழைநீர் பல இடங்களில் தேங்கி கிடந்ததால் போக்கு வரத்துக்கு இடையூறாக இருந்தது. தென்னை, பனை மர விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ராமநதி, கடனாநதி மற்றும் கருப்பாநதி, குண்டாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
ராமநதியில் 12 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. தென்காசி மற்றும் செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் சாலையில் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் சாக்கடை நீருடன் மழைநீர் கலந்து சென்றது.