வாகனங்களை விரட்டிய ஒற்றை யானையால் பரபரப்பு
- யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.
- யானைகளை செல்போனில் படம் எடுக்க கூடாது என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு:
சத்தியமங்கலம் புலிகள் காப்பாத்திக்குட்பட்ட வன ப்பகுதியில் யானைகள், புலி, சிறுத்தை, காட்டெருமைகள், மான்கள் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
குறிப்பாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இதேபோல் வனப்பகுதியில் உள்ள சாலைகளில் ஜாலியாக நடந்து செல்கின்றன.
அவ்வப்போது வாகன ஓட்டைகளையும் விரட்டி அச்சுறுத்துகின்றன. கரும்பு லோடுகளை ஏற்றி சொல்லும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை குட்டிகளுடன் சுவைத்து பின்னர் வனப்பகுதிக்கு சென்று வருகிறது. இதனால் வனப்பகுதியில் வாகன ஓட்டிகள் கவனமாக சென்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கடம்பூர் அடுத்த மாக்கம் பாளையம் செல்லும் வழியில் ஒற்றை யானை ஒன்று சாலையில் நடமாடிக் கொண்டிருந்தது, திடீரென அந்த யானை அந்த சாலை வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் வந்தவர்களை துரத்த தொடங்கியது.
இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து சிதறி ஓடினர். சிறிது நேரம் போக்கு காட்டிய யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னரே வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்த பகுதியில் தொடர்ந்து யானை நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வாகனத்தை நிறுத்தக் கூடாது என்றும், யானைகளை செல்போனில் படம் எடுக்க கூடாது என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.