பெண் ஆட்டோ டிரைவர் நடுரோட்டில் படுத்து உருண்டு போராட்டம்
- சாலையில் திடீரென நடுரோட்டில் உருண்டு புரண்டு போராட்டம் செய்தார்.
- இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியவில்லை.
ஈரோடு:
ஈரோடு டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி கீதா.இவர்கள் 2 பேருமே ஆட்டோ டிரைவர்கள். இவர்களுக்கு யோகேஸ்வரன் (22) என்ற மகன் உள்ளார்.இவர் ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் சந்திசேகருக்கு கையில் அடிப்பட்டதால் அவர் ஆட்டோ ஓட்டாமல் வீட்டில் இருந்து வருகிறார். இதையடுத்து அவரது மனைவி கீதா மட்டும் ஆட்ேடா ஓட்டி குடும்பத்தை நடத்தி வருகிறார்.
இவர்களது மகன் யோகேஸ்வரன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடிய வில்லை.
இதையடுத்து கீதா வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். ஆனால் இதுவரையும் மாயமான யோகேஸ்வரன் பற்றி எந்த தகவலும் இல்லை.
இதையடுத்து இன்று காலை 9 மணியளவில் கீதா ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் திடீரென நடுரோட்டில் உருண்டு புரண்டு போராட்டம் செய்தார்.
இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதுப்பற்றி தெரியவந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து பெண் ஆட்டோ டிரைவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது அவர் மாயமான என் மகனை மீட்டுத்தர வேண்டும். சர்வ சாதாரணமாக போதை பொருட்கள் கிடைக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
பின்னர் பெண் போலீசார் உதவியுடன் கீதாவை போலீசார் மீட்டனர். பின்னர் அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்தனர்.
அப்போது தான் ஆட்டோவில் வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.