பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் விழா
- கடந்த 2 வருடமாக கொரோனாவை முன்னிட்டு கோவில் பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கினர். பக்தர்களுக்கு குண்டம் இறங்க அனுமதிக்கவில்லை
- ஆங்காங்கே பக்தர்கள் வரிசையாக நின்று குண்டம் மிதிப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன
கோபி,
கோபிசெட்டிபாளையம் அருகே பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடம் தோறும் ஜனவரி மாதம் குண்டம் மற்றும் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது.
கடந்த 2 வருடமாக கொரோனாவை முன்னிட்டு கோவில் பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கினர். பக்தர்களுக்கு குண்டம் இறங்க அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. ஆண், பெண்கள் குண்டம்இறங்குவதற்காக மாலைஅணிந்து விரதம் இருந்து வருகின்றனர்.
இன்று மாலை 4 மணி அளவில் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும், 11-ந் தேதி பெண்கள் மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து 12-ந்தேதி முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா நடைபெறுகிறது.
இதையொட்டி அதிகாலை 5.30 மணி அளவில் கோவிலுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள 50 அடி குண்டத்தில் முதன்முதலாக தலைமை பூசாரி ஆனந்த் என்பவர் குண்டம் இறங்கி தொடங்கி வைப்பார்.
அதைத் தொடர்ந்து பக்தர்கள் ஆயிரக்கணக்கா னோர் குண்டம் இறங்குவார்கள்.
இதையொட்டி ஆங்காங்கே பக்தர்கள் வரிசையாக நின்று குண்டம் மிதிப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் 13-ந் தேதி மாலை 4 மணி அளவில் தேர் திருவிழா நடைபெறுகிறது. 14-ந் தேதி மலர் பல்லக்கு நடைபெற உள்ளது. அன்று இரவு 11 மணி அளவில் மலர் பல்லக்கானதுபாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு அம்மன் மலர் பல்லக்கில் கோபி பெருமாள் கோவிலை வந்து அடைகிறது.
அதைத் தொடர்ந்து 15-ந்தேதி கோபியில் தெப்ப உற்சவம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 16-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை மஞ்சள் நீர் உற்சவம் நடைபெற உள்ளது. 21-ந் தேதி சனிக்கிழமை மறுபூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
குண்டம் திருவிழாவையொட்டி குண்டத்துக்கு தேவையான விறகுகளை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தி வருகின்றனர்.