நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்த வேண்டும்
- தென், வட மாநிலங்களின் பல பகுதிகளிலும் நெல் உற்பத்தியாகிறது.
- நெல்லுக்கான ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தி வழங்க முன்வர வேண்டும்.
ஈரோடு, நவ. 19-
கீழ்பவானி பாசன பயனாளிகள் நலச்சங்க தலைவர் நல்லசாமி நெல்லு க்கான ஆதார விலையை உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு 150 ரூபாய் வரை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. பல ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு விலையை உயர்த்தி உள்ளது.
இதை விவசாயிகள் வரவேற்கிறோம். ஆனால் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
வட மாநிலங்களில் மட்டும் கோதுமை அதிகமாக விளைகிறது. இதனால் மத்திய அரசின் இந்த அறிவிப்பு வடமாநில விவசாயிகளுக்கு மட்டும் பயன் தரும் வகையில் அமைந்துள்ளது.
தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களிலும், வட மாநிலங்களின் பல பகுதிகளிலும் நெல் உற்பத்தியாகிறது.
எனவே தென் மாநில விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு விவசாயிகள் பயன்பெறும் வகையில் நெல்லுக்கான ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தி வழங்க முன்வர வேண்டும்.
அத்துடன் 100 நாள் வேலை உறுதி அளிப்பு திட்டம், விவசாய பணிகளுக்கும், பயன்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் மாற்றி அமைத்து செயல்படுத்த முன்வர வேண்டும்.
விவசாய பணிக்கு கூலி ஆட்கள் தட்டுப்பாடு அதிகம் உள்ளதை கருத்தில் கொண்டு வேளாண் பணிகளுக்கும் பயன்படுத்தும் வகையில் மாற்றி செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.