- சென்னிமலை அருகே சாம்பமேடு புரவியாத்தாள் கோவிலின் அருகில் இருந்த முள் செடிகளை அப்பகுதியில் உள்ளவர்கள் ஜே.சி.பி எந்திரம் மூலம் அகற்றி கொண்டிருந்தனர்.
- அப்போது அங்கு சுத்தம் செய்த இடத்தில் குழி ஒன்று இருந்ததை கண்டுள்ளனர்.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே பாலதொழுவு ஊராட்சிக்கு உட்பட்டது வெங்கமேடு. இங்குள்ள சாம்பமேடு என்ற இடத்தில் புரவியாத்தாள் கோவில் உள்ளது.
இந்த கோவிலின் அருகில் இருந்த முள் செடிகளை அப்பகுதியில் உள்ளவர்கள் ஜே.சி.பி எந்திரம் மூலம் அகற்றி கொண்டிருந்தனர். அப்போது அங்கு சுத்தம் செய்த இடத்தில் குழி ஒன்று இருந்ததை கண்டுள்ளனர். பின்னர் அந்த குழிக்குள் பார்த்தபோது சுமார் 6 அடி அகலத்தில் அந்த குழி இருந்துள்ளது.
அதாவது பானை வடிவத்தில் குழியின் மேல் பகுதி அகலம் குறைவாகவும், உள்பகுதி அகலமாகவும் இருந்துள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊருக்கு அருகில் உள்ள கொடுமணல் பகுதியில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு அவை ஆவணப்படுத்தப்பட்டு ள்ளது. அதேபோல் எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம் பகுதியிலும் பாண்டியர்கள் வாழ்ந்ததாக கூறப்படுவது உண்டு.
அதன்படி சாம்பமேடு பகுதியிலும் பழங்கால மக்கள் வாழ்ந்திருக்கலாம். அவர்கள் நிலத்தடியில் எதையாவது சேமித்து வைப்பதற்காக பெரிய அளவிலான பானையை புதைத்து வைத்திருக்கலாம்.
நாளடைவில் அந்த பானை உடைந்து குழி மட்டும் இருந்திருக்கலாம் என்றனர். இந்த அதிசய குழி பற்றிய தகவல் கிடைத்ததும் பாலதொழுவு ஊராட்சி துணைத்தலைவர் சத்தியபிரியா சுப்பிரமணி மற்றும் அப்பகுதி பொது–மக்கள் ஆர்வத்துடன் அந்த குழியை பார்வையிட்டனர்.