கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
- ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
- வழிபாட்டில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு:
ஏசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளினை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.
ஈஸ்டர் பண்டிகையையொட்டி கடந்த 2-ந் தேதி குருத்தோலை ஞாயிறும், கடந்த 6-ந் தேதி பெரிய வியாழனும், 7-ந் தேதி புனித வெள்ளியையொட்டி சிலுவை வழிபாடு நடந்தது.
இந்நிலையில் ஏசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகையையொட்டி அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
இதில் ஈரோடு புனித அமல அன்னை தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையை யொட்டி நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு ஒளி வழிபாடும், திருமுழுக்கு (ஞானஸ்நானம்) புதுப்பித்தல் நிகழ்ச்சியும் நடந்தது.
முன்னதாக ஏசு கிறிஸ்து கல்லறையில் இருந்து உயிர்தெழும் காட்சி தத்ரூபமாக அமைக்கப்பட்டது.
ஈஸ்டரையொட்டி புனித அமல அன்னை ஆலய பங்குதந்தையும், ஈரோடு மறைவட்ட முதன்மை குருவுமான ஜான்சேவியர், உதவி பங்கு தந்தை நல்ல ஜேக்கப்பதாஸ் ஆகியோர் தலைமையில் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.
இதேபோல் சி.எஸ்.ஐ. சர்ச், ஈரோடு ெரயில்வே காலனி திருஇருதய ஆண்டவர் ஆலயத்திலும், பி.பெ. அக்ரஹாரம் லூர்து மாதா ஆலயத்திலும், பெரியசேமூர் செபஸ்தியார் ஆலயத்திலும் ஈஸ்டர் பண்டிகையொட்டி இன்று அதிகாலை வரை சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் வாழ்த்துக்களை தெரிவித்தும் மகிழ்ந்தனர்.