கரும்பு காட்டில் திடீர் தீ விபத்து
- திடீரென கருப்பு தோட்டத்தில் தீப்பிடித்து கரும்புகள் எரிந்து கொண்டு இருந்தன.
- தீயணைப்பு வீரர்கள் உடனே தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அடுத்த அய்யகவுண்டன் பாளையம் அருகே உள்ள சாணங்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அன்னக்கொடி (47). விவசாயி. இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார்.
இந்நிலையில் திடீரென கருப்பு தோட்டத்தில் தீப்பிடித்து கரும்புகள் எரிந்து கொண்டு இருந்தன. இதனைக்கண்ட அன்னக்கொடி பதறி அடித்து அக்கம் பக்கத்தினரை அழைத்து சத்தமிட்டார்.
அதற்குள் தீ மள மள கரும்புத் தோட்டத்தில் பரவியது. தீப்பிடித்த சம்பவம் குறித்து உடனே அப்பகுதி பொதுமக்கள் மொடக்குறிச்சி தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் லெமர் தம்பையா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனே தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் கரும்பு தோட்டத்திற்கு மேல் சென்ற மின் கம்பிகள் உரசியதால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் தீயில் 3½ ஏக்கர் கரும்பு எரிந்து சேதமானதுடன் தண்ணீர் பைப்புகளும் தீயில் கருகி போனது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.