உள்ளூர் செய்திகள் (District)

நீலகிரியில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள்-கலெக்டர் அம்ரித் தகவல்

Published On 2023-07-02 08:52 GMT   |   Update On 2023-07-02 08:52 GMT
  • வருகிற 5-ந் தேதி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
  • ஒரு பள்ளியிலிருந்து ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் 3 மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

ஊட்டி,

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் 2022-2023-ம் ஆண்டிற்கான மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டுமென்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, வருகிற 5-ந் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 10 மணி முதல் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

பள்ளி மாணவர்களுக்கான விதிமுறைகள் பின்வருமாறு:-

இப்பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளி மாணவ- மாணவிகள் முதன்மைக் கல்வி அலுவலகத்தின் வாயிலாக தாங்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரிடம் இருந்து கட்டாயம் பரிந்துரைக் கடிதம் பெற்று வர வேண்டும். ஒரு பள்ளியிலிருந்து ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் 3 மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். பள்ளி அளவிலான பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5000 என்ற வகையில் பரிசுத்தொகைகள் வழங்கப்பெற உள்ளன.

போட்டிகள் நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். பரிசுத்தொகைகள் மற்றொரு நாளில் மாவட்ட கலெக்டர் மூலம் வழங்கப்படும்.

சென்னைத் தமிழ் வளர்ச்சி இயக்கத்திலிருந்து முத்திரையிட்ட உறைகளிலிருந்து பெறப்படும் தலைப்புகள், போட்டி தொடங்குவதற்கு முன்னர் நடுவர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் எடுத்து அறிவிக்கப்படும். 5.7.2023 புதன்கிழமை அன்று நடைபெறும் இப்போட்டிகளில் நீலகிரி மாவட்டத்தில், உள்ள மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் அம்ரித் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News