உள்ளூர் செய்திகள்

பயன்பாடில்லாமல் தண்ணீர் தேங்கி காட்சியளிக்கும் பூங்கா.

பூங்காவில் பயன்பாடில்லாமல் வீணாகி கொண்டு இருக்கும் உடற்பயிற்சி சாதனங்கள்

Published On 2023-05-10 09:53 GMT   |   Update On 2023-05-10 09:53 GMT
  • மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டு இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
  • உடற்பயிற்சி சாதனங்கள் அனைத்தும் பயன்படுத்தப்படாமல் காட்சி பொருளாக காணப்படுகின்றன.

பூதலூர்:

பூதலூர் ஊராட்சி ஒன்றியம் வெண்டயம்பட்டி கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா என்ற பெயரில் குழந்தைகளை மகிழ்விக்கும் விளையாட்டு சாதனங்கள், இளைஞர்கள், பெண்களுக்கான உடற்பயிற்சி சாதனங்கள் அமைக்கப்பட்டது.

பத்தாயிரம் சதுர அடி பரப்பில் முற்றிலும் நான்கு பக்கமும் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டு இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

பூங்காவின் நடுவில் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்கான அதிநவீன சாதனங்கள் மேற்கூரையுடன் அமைந்த ஒரு கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு வந்து பயன்பெறுவர் வசதிக்காக தனித்தனியான கழிவறை வசதியும் தண்ணீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் இந்த பூங்கா எந்தவித பராமரிப்பும் இன்றி யாரும் பயன்படுத்தப்படாத நிலையில்,அதில் உள்ள குழந்தைகள் விளை யாட்டு அமைப்புகள் எல்லாம் துருப்பிடித்து காணப்படுகின்றன.

அதேபோல மதிப்புமிக்க உடற்பயிற்சி சாதனங்கள் அனைத்தும் பயன்படுத்தப்படாமல் காட்சி பொருளாக காணப்படுகின்றன. சில சாதனங்கள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன.

இந்த பூங்காவின் நிறைவு பகுதியில் காணப்படும் கழிவறை கதவுகள் உடைக்கப்பட்டு சேதமடைந்துள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பூங்காவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல லட்சம் மதிப்பீட்டில் பொருத்தப்பட்டு தற்போது யாரும் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள அதிநவீன உடற்பயிற்சி சாதனங்களை சிறப்பு அனுமதி பெற்று பூதலூர் ஒன்றியத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளுக்கு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

அப்படி இல்லாமல் ஒரு நல்ல நோக்கத்திற்காக செய்யப்பட்ட அமைப்பு வீணாகி கொண்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

எனவே இந்த பூங்காவை நல்ல முறையில் பராமரித்து பயன்படக்கூடிய அளவில் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News