சிகிச்சையின்போது பெண் உயிரிழப்பு- போலி டாக்டர் கைது
- பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
- மூலிகை சிகிச்சை மையத்திற்கு சீல் வைக்க போலீசார் சென்றபோது பல நோயாளிகள் அங்கு காத்திருந்தனர்.
திண்டுக்கல்:
தேனி அருகில் உள்ள நாகலாபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது49). இவர் அதே பகுதியில் பல ஆண்டுகளாக மூலிகை சிகிச்சை மையம் நடத்தி வருகிறார். இந்த மையத்தில் பெரியகுளத்தை சேர்ந்த வங்கி ஊழியரின் மனைவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தவறான சிகிச்சையால் தனது மனைவி இறந்து விட்டதாக வங்கி ஊழியர் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் மருத்துவ குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
சிகிச்சை மையம் நடத்திய ராமசாமியின் மருத்துவ படிப்பு தொடர்பான சான்றிதழ்களை சோதனை செய்தபோது அது போலியானது என தெரிய வந்தது. இதனையடுத்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் ராமசாமியை கைது செய்தார்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரது மூலிகை சிகிச்சை மையத்திற்கு சீல் வைக்க போலீசார் சென்றபோது பல நோயாளிகள் அங்கு காத்திருந்தனர். அவர்களிடம் உரிய விபரத்தை எடுத்து கூறி வேறு இடத்தில் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.