உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி விவசாயி பலி: மின் ஊழியர்களை கைது செய்ய கோரி கிராம மக்கள் சாலை மறியல்

Published On 2022-11-16 06:56 GMT   |   Update On 2022-11-16 06:56 GMT
  • இரவு 10 மணியளவில் மின் ஊழியர்களை கைது செய்ய கோரி, கடலூர் - சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
  • காவ்யா கிராம மக்களிடம் சமரச பேச்சில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனஉறுதி அளித்தார்.

வேப்பூர், நவ. 16-

வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, 54. இவரது வயலில் மின் அழுத்த கம்பி தாழ்வாக செல்வதாக, 2 நாட்களுக்கு முன் வேப்பூர் துணை மின் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் வயலில் சாகுபடி செய்த மக்காச்சோளம் பயிரை பார்வையிட ராமசாமி சென்றார். ராமசாமி, வயலுக்கு சென்று பல மணிநேரம் ஆகியும் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த அவரது மகன் செல்வகுமார், இரவு 7:30 மணியளவில் வயலுக்கு சென்று அவரை தேடினார்.

அப்போது, அறுந்து விழுந்த மின்கம்பியை ராமசாமி மிதித்து, மின்சாரம் தாக்கி இறந்தது தெரிய வந்தது. தகவலறிந்து வந்த அப்பகுதி கிராம மக்கள் சிலர், இரவு 10 மணியளவில் மின் ஊழியர்களை கைது செய்ய கோரி, கடலூர் - சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையறிந்த திட்டக்குடி டி.எஸ்.பி., காவ்யா கிராம மக்களிடம் சமரச பேச்சில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனஉறுதி அளித்தார். பின்னர், 10:30 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 

Tags:    

Similar News