உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் 35 குளங்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி- கலெக்டர் கிராந்திகுமார் பாடி பேட்டி

Published On 2023-04-25 09:02 GMT   |   Update On 2023-04-25 09:02 GMT
  • சில கிராமங்களில் சுமார் 100 ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்தன.
  • வருவாய் துறை அதிகாரிகள் சென்று பார்வையிட்டு பாதிப்பு விவரங்களை கணக்கெடுத்தனர்.

சூலூர்,

கோவை மாவட்டம், சூலூர் அடுத்த சுல்தான்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் ஜெ.கிருஷ்ணாபுரம், தாளகரை, கரையாம் பாளையம், ஜல்லிப்பட்டி, செஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 100 ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்தன.

அறுவடைக்கு சில மாதங்களே இருந்த நிலையில் மரங்கள் சரிந்ததால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகளின் தோட்டங்களுக்கு வருவாய் துறை அதிகாரிகள் சென்று பார்வையிட்டு பாதிப்பு விவரங்களை கணக்கெடுத்தனர்.

இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி, நேற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாய்ந்து கிடந்த வாழை மரங்களை நேரில் பார்வையிட்டார். அப்போது கலெக்டரிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து கலெக்டர் கிராந்தி குமார் பாடி கூறியதாவது:-

பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு முழு நிவாரண தொகையும் கிடைக்க மாவட்ட நிர்வாகம் ஆவண செய்யும்.காப்பீடு செய்யாத பயிர்களுக்கும் அரசிடம் எடுத்துரைத்து இழப்பீடு பெற்று தர நடவடிக்கை செய்யப்படும் .

விவசாய நிலங்களுக்கு வண்டல் மண் தேவைப்பட்டால் உரிய அனுமதியுடன் குளங்களில் எடுத்துக் கொள்ளலாம். கோவை மாவட்டத்தில் 35 குளங்களில் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது என்றார்.கலெக்டர் ஆய்வு நிகழ்ச்சியில் சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.பி. கந்தசாமியும் பங்கேற்றார். அவர் கூறுகையில் இந்தாண்டு அதிக அளவில் வாழையை விவசாயிகள் பயிர் செய்து இருக்கிறார்கள்.

விற்பனை செய்யக்கூடிய அளவிற்கு இந்த வாழைகள் வளர்ந்து உள்ள நிலையில் நேற்று முன்தினம் அடித்த சூறாவளி காற்றினால் ஒன்றரை லட்சத்துக்கு மேற்பட்ட வாழைகள் பாதிப்புக்கு உள்ளாகி விற்பனை செய்ய முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது எனவே உடனடியாக அரசு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு உரிய விலை வழங்க வேண்டும். இது குறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.

உடனடியாக மாவட்ட கலெக்டர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News