உள்ளூர் செய்திகள் (District)

விபத்து நடந்த இடத்தில் பயிற்சி டி.எஸ்.பி.க்கள் இலக்கியா, பிரதீப் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

திண்டுக்கல் அருகே டைல்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து

Published On 2022-07-25 07:43 GMT   |   Update On 2022-07-25 07:43 GMT
  • திண்டுக்கல் அருகே டைல்ஸ் கடையில் தீ பற்றி விபத்து ஏற்பட்டது
  • இதில் சுமார் ரூ.30லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது

திண்டுக்கல்:

திண்டுக்கல் பேகம்பூர் சிக்கந்தர் சாய்பு சந்து பகுதியைச் சேர்ந்தவர் முகமது முஸ்தபா (வயது 47). இவர் வத்தலக்குண்டு ரோடு ஏ.பி. நகரில் டைல்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.

சனிக்கிழமை இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு வந்து விட்டார். இன்று அதிகாலை அவரது கடையில் தீப்பிடித்து எரிவதாக அப்பகுதி பொதுமக்கள் முகமது முஸ்தபாவுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த முஸ்தபா தனது உறவினர் சர்புதீனுடன் கடைக்கு வந்தார். அப்போது காற்று வேகமாக வீசியதால் கடையில் இருந்த பொருட்கள் எரிந்தது. மேலும் கடையின் முன்பு நிறுத்தி இருந்த சொகுசு கார் மற்றும் சரக்கு வாகனமும் தீயில் எரிந்தன.

இது குறித்து திண்டுக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை போராடி அணைத்தனர்.

மேலும் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பயிற்சி டி.எஸ்.பி.க்கள் இலக்கியா, பிரதீப் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இந்த விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானதாக கடையின் உரிமையாளர் தெரிவித்தார். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது தொழில் போட்டி காரணமாக யாரேனும் தீ வைத்துச் சென்றார்களா; என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News