உள்ளூர் செய்திகள்

சிங்காநல்லூர், சாய்பாபா காலனியில் மேம்பால பணிகள் விரைவில் தொடக்கம்

Published On 2023-08-15 09:39 GMT   |   Update On 2023-08-15 09:39 GMT
  • சாய்பாபா காலனி பகுதியில், ரூ.46.61 கோடி மதிப்பில் பாலம் கட்ட, கடந்த 9-ந் தேதி டெண்டர் வெளியிடப்பட்டது.
  • இவ்விரு பாலங்களையும் கட்டுவதற்கு, தலா 4 மாதங்கள் கால அவகாசம் தரப்பட்டுள்ளது.

கோவை,

கோவை நகரின் வழியே பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகள் கடந்து செல்கின்றன. இவற்றில் திருச்சி ரோட்டில் சுங்கம் பகுதியிலும், மேட்டுப்பாளையம் ரோட்டில் கவுண்டம்பாளையம், ஜி.என்.மில்ஸ் ஆகிய இடங்களிலும் பாலங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதே ரோட்டில், பெரிய நாயக்கன்பாளையத்திலும், பொள்ளாச்சி ரோட்டில் உக்கடம் பகுதியிலும், மேம்பாலங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. இருப்பினும், தேசிய நெடுஞ்சாலைகளில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதனால், திருச்சி ரோட்டில் சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம் ரோட்டில் சாய்பாபா காலனி, சத்தி ரோட்டில் சரவணம்பட்டி பகுதியிலும் பாலங்கள் கட்டுவதற்கு, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் அளித்தது.

திருச்சி ரோட்டில் சிங்காநல்லூர் பகுதியில் 2.4 கி.மீ., நீளத்துக்கும், மேட்டுப்பாளையம் ரோட்டில் சாய்பாபா காலனி பகுதியில் 1.14 கி.மீ., தூரத்துக்கும், சரவணம்பட்டியில் காளப்பட்டி ரோடு சந்திப்பு-துடியலூர் ரோடு சந்திப்பு வரை 1.4 கி.மீ., நீளத்துக்குமாக 3 புதிய பாலங்கள் கட்ட, ரூ.280 கோடி நிதியையும், மத்திய அரசு ஒதுக்கிவிட்டது. மூன்று பாலங்களுக்கும் 2022 ஏப்ரலில் டெண்டரும் விடப்பட்டது.

ஆனால், கோவை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாராகி வந்ததால், இந்த 3 பாலங்களில் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டன.

திட்ட அறிக்கையில், அவிநாசி ரோடு மற்றும் சத்தி ரோட்டில் மட்டுமே முதற்கட்டமாக மெட்ரோ ரெயில் தடம் அமைவது உறுதியானது.

இதனால், சரவணம்பட்டி தவிர, மற்ற 2 பாலங்களையும கட்ட மெட்ரோ நிறுவனம் தடையின்மைச் சான்று வழங்கியது.

அதன்படி, மற்ற இரண்டு பாலங்களையும் கட்டுவதற்கு, தேசிய நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விட்டுள்ளது. சிங்காநல்லூரில் ரூ.110.80 கோடி மதிப்பில் பாலம் கட்ட, கடந்த ஜூலை 24 அன்று டெண்டர் விடப்பட்டது. இது செப்டம்பர் 11-ல் இறுதி செய்யப்படவுள்ளது. சாய்பாபா காலனி பகுதியில், ரூ.46.61 கோடி மதிப்பில் பாலம் கட்ட, கடந்த 9-ந் தேதி டெண்டர் வெளியிடப்பட்டது. இது வருகிற செப்டம்பர் 26-க்குள் இறுதி செய்யப்படும்.

செப்டம்பர் இறுதிக்குள் இரண்டு டெண்டர்களும் இறுதி செய்யப்படும் பட்சத்தில், அக்டோபரில் பணிகள் தொடங்குவதற்கு வாய்ப்புள்ளது.

இவ்விரு பாலங்களையும் கட்டுவதற்கு, தலா 4 மாதங்கள் கால அவகாசம் தரப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு பாலங்களுக்குமே, ஒரு சதுர அடி கூட நிலம் கையகப்படுத்த வேண்டிய தேவை இல்லாத காரணத்தால், பணிகளை முடிப்பதில் தடைகள் இருக்காது.

சரவணம்பட்டியில் பாலம் கட்டுவது குறித்து, பின்பு விவாதித்துக் கொள்ளலாம் என்று, தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சரவணம்பட்டியில் பாலம் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள இடத்தில், மெட்ரோ தடத்துக்கான தூண்களை அமைக்க, நான்கு மீட்டர் அளவுக்கு நிறுவனமே, நிலம் எடுத்துக் கொடுப்பதாகவும், அத்துடன் இணைந்து பாலம் கட்டலாம் என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளதாகத் தெரிகிறது.

Tags:    

Similar News