ஓசூர் அரசு பள்ளி கழிப்பறையை சீரமைக்க வேண்டும்
- அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு போதிய கழிப்பறைகள் இல்லை.
- பள்ளி அருகேயுள்ள பள்ளத்தை மூட வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.kris
ஓசூர்,
தமிழக எல்லையில் ஓசூர் அருகே ஜுஜுவாடி யில் 5 ஏக்கர் பரப்பளவில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் தமிழக எல்லை பகுதியில் உள்ள கிராம மாணவ, மாணவிகள் என 1,720 பேர் கல்வி பயின்று வருகின்றனர்.
பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகும் நிலையிருந்து வருவதாக மாணவர்களின் பெற்றோர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக பெற்றோர் சிலர் கூறுகையில், ஜுஜுவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு போதிய கழிப்பறைகள் இல்லை. இருக்கும் கழிப்பறையில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. விளையாட்டு மைதானமும் இல்லை. உடற்கல்வி ஆசிரியரும் இல்லை. பள்ளிக்கு சுற்றுச்சுவரும் இல்லை.
மேலும், பள்ளி வளாகத்தையொட்டி அடர்ந்த மரங்கள் உள்ள பகுதியில் 10 அடி பள்ளம் உள்ளது. பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் ஒரு கழிப்பறையில் அடிக்கடி பாம்பு வருவதால், அது எப்போதும் மூடப்பட்டு, காட்சிப் பொருளாக இருந்து வருகிறது.
இதனால், திறந்தவெளியில் உள்ள பள்ளம் பகுதியை மாணவர்கள் சிறுநீர் கழிக்கும் இடமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
இப்பள்ளி மாநில எல்லையில் உள்ளதால், மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. மாணவர்களின் நலன் கருதி பள்ளியில் இருக்கும் கழிப்பறையைப் பராமரித்து முறையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிக்குச் சுற்றுச்சுவர் கட்டவும், பள்ளி வளாகத்தில் இருக்கும் இடத்தை சீரமைத்து விளையாட்டு மைதானம் அமைக்கவும், உடற்கல்வி ஆசிரியரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.
இதுதொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில் பள்ளியில் உள்ள கழிப்பறையைப் பயன்படுத்த முடியாத நிலையில் மாணவர்கள் வகுப்பைப் புறக்கணித்து விட்டு, பள்ளிக்கு அருகேயுள்ள பகுதியில் சுற்றி வருகின்றனர். பள்ளி அருகேயுள்ள பள்ளத்தை மூட வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.
கரடும், முரடுமான பகுதியை விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்தும் நிலையுள்ளது. 3 உடற்கல்வி ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒருவர் மட்டுமே உள்ளார். இதனால், மாணவர்கள் முறையான விளையாட்டு பயிற்சிகள் மேற்கொள்ள முடியவில்லை என கூறினர்.
இப்பள்ளிக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.