தஞ்சையில், நாளை 24 கருடசேவை வைபவம்
- வெண்ணாற்றங்களை ஸ்ரீநரசிம்மபெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது.
- வெண்ணாற்றங்கரை சன்னதிகளில் விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீராமானுஜ தர்சனசபா இணைந்து நடத்தும் 88-ம் ஆண்டு 24 கருட சேவை நாளையும் (19-ந் தேதி), 15 நவநீத சேவை நாளை மறுநாளும் (20-ந் தேதி) தஞ்சையின் 4 ராஜவீதிகளில் நடைபெற உள்ளது.
இதற்கான உற்சவர்கள் இன்று மதியம் 12 மணிக்கு மேல் தொடங்கியது. முதல் நிகழ்ச்சியாக வெண்ணாற்றங்களை ஸ்ரீநரசிம்மபெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது.
நாளை காலை 6 மணிக்கு வெண்ணாற்றங்கரையில் இருந்து திவ்யதேச பெருமாளுடன் கருட வாகனத்தில் புறப்பட்டு காலை 7 மணி முதல் 12 மணி வரை தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள கீழராஜவீதி, தெற்குவீதி, மேலராஜவீதி, வடக்கு ராஜவீதி ஆகிய 4 ராஜவீதிகளில் சேவை உற்சவம் நடைபெற உள்ளது.நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு வெண்ணாற்றங்கரையில் இருந்து நவநீத சேவையில் புறப்பட்டு காலை 7.30 மணி முதல் 11 மணி வரை சேவையில் மேற்கூறிய 4 ராஜவீதிகளில் உற்சவம் நடைபெறுகிறது.
21-ம் தேதி (செவ்வாய்கிழமை) காலை 6 மணிக்கு வெண்ணாற்றங்கரையில் சனனதிகளில் விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது. இதனை தவிர நாளை மதியம் 3 மணிக்கு ராஜராஜ சமய சங்கத்தில் திருவாய்மொழி தொடக்கமும், 20-ம் தேதி இரவு 8 மணிக்கு சாற்றுமுறை உற்சவமும் நடைபெறுகிறது.ததியாராதனைகள் மேலவீதி கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி அருகில் சக்காநாயக்கன் தெருவில் உள்ள ராஜராஜ சமய சங்கத்தில் நடைபெற உள்ளது.
இந்த உற்சவங்களில் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு பெருமாளை சேவித்து பயன்பெறவும், உற்சவ விவரங்களை மற்றவர்களுக்கு தெரிவிக்கும்படியும் விழா அமைப்பாளர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.இந்த 24 கருட சேவையும், 15 நவநீத சேவையும் கடந்த பல ஆண்டுகளாக தஞ்சையில் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.