உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் பலாப்பழம் விற்பனை அமோகம்

Published On 2023-04-17 09:55 GMT   |   Update On 2023-04-17 09:55 GMT
  • தற்பொழுது கோடை தொடங்கியதால் பண்ருட்டியில் பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளது.
  • ஒரு கிலோ வியாபாரிகளுக்கு 25 ரூபாயும் நுகர்வோருக்கு கிலோ 30 ரூபாய் என கொடுக்கப்படுகிறது.

தருமபுரி,

தமிழகத்தில் கோடை துவங்கியதுமே முக்கனிகளின் வரத்து அதிகரிக்கும். அதிலும் பலாப்பழத்திற்கு என தனி மவுஸ் உண்டு.

தருமபுரி மாவட்டத்தில் மாரண்டஅள்ளி, வத்தல்மலை, சித்தேரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மாம்பழத்திற்கு அடுத்ததாக பலாப்பழம் விளைச்சல் அதிகமாக உள்ளது.

இந்த மலைப்பகுதிகளில் விளையும் பலாப்பழங்கள் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதியில் விற்பனை செய்யப்படுிறது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள நகர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பலாப்பழத் தேவைகளை பூர்த்தி செய்ய தற்பொழுது அதிகளவு இறக்குமதி செய்யப்படுகிறது.

கொல்லிமலை, ஏற்காடு, ஏலகிரி, பண்ருட்டி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பலாப்பழ விற்பனைக்கு இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றனர்.

தற்பொழுது கோடை காலம் ஆரம்பித்த நிலையில் பண்ருட்டி பலாப்பழம் வரத்து அதிகரித்துள்ளது. இந்த பழத்திற்கு அதிக சுவை உள்ளதால் வியாபாரிகள் அதிகளவு அங்கிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழம் விற்பனை சூடு பிடித்துள்ளது.

இதுகுறித்து மொத்த வியாபாரி முத்துராஜ் கூறும்போது நான் 30 வருடங்களாக பலாப்பழம் மொத்த வியாபாரம் செய்து வருகிறேன்.

தருமபுரி மாவட்டத்தில் மாரண்டஅள்ளி, வத்தல்மலை, சித்தேரி, உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழம் விளைச்சல் உள்ளது. அங்கு விளையும் பலாப்பழங்கள் அந்தந்த பகுதியிலேயே விற்பனை செய்யப்படுவதால் மாவட்டத்தில் பலாப்பழம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலும் தருமபுரியில் பண்ருட்டி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் விலையும் பலாப்பழங்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் பண்ருட்டி பலாப்பழத்திற்கென தனி மவுசு உண்டு. அங்கு விளையும் பழங்கள் ஒரு பழம் ஐந்து கிலோ முதல் 50 கிலோ எடை வரை விளையும் பலாப்பழத்தின் சோலைகள் பெரிதாகவும் சுவை மிகுந்ததாகவும் உள்ளது.

தற்பொழுது கோடை தொடங்கியதால் பண்ருட்டியில் பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளது. அங்கு விளையும் பலாப்பழங்களை லாரிகளில் ஏற்றி வந்து தருமபுரி, காரிமங்கலம், கிருஷ்ணகிரி, ஓசூர், போச்சம்பள்ளி, கம்பைநல்லூர், பென்னாகரம், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சப்ளை செய்து வருகிறோம்.

ஒரு கிலோ வியாபாரிகளுக்கு 25 ரூபாயும் நுகர்வோருக்கு கிலோ 30 ரூபாய் என கொடுக்கப்படுகிறது. தற்போது மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைப்பதால் பலாப்பழம் விற்பனை அமோகமாக சூடு பிடித்து உள்ளது.

இது குறித்து சித்தா மருத்துவர்கள் கூறும்போது பலாப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால், இது ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பழம் இந்த பழத்தை சாப்பிட்டால், உடலை பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்காமல் பாதுகாக்கிறது.

நார்ச்சத்து அதிகம் உள்ள பழம் என்றால் அது பலாப்பழமே. மேலும் இது அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையை உடையது என்று தெரிவிக்கின்றனர்.

மேலும் முக்கனிகளில் பலாப்பழமும் சிறந்த கனி என்பதால் பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர் என்றார்.

Tags:    

Similar News