கடையம் யூனியனுக்குட்பட்ட ஊராட்சிகளை சுகாதாரமான கிராமமாக மாற்ற வேண்டும் -மாவட்ட கலெக்டர் பேச்சு
- ஊராட்சிகளுக்கு குப்பை அள்ளும் ஆட்டோக்களை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கிய காட்சி. அருகில் சோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மற்றும் பலர் உள்ளனர்.
- தென்காசி மாவட்டம் கடையம் யூனியனுகுட்பட்ட 23 ஊராட்சி மன்றங்களுக்கும் ரூ.49.50 லட்சம் செலவில் சோலாரால் இயங்கக்கூடிய 23 ஆட்டோக்கள் குப்பைகளை சேகரிக்க வழங்கப்பட்டன.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் யூனியனுகுட்பட்ட 23 ஊராட்சி மன்றங்களுக்கும் ரூ.49.50 லட்சம் செலவில் சோலாரால் இயங்கக்கூடிய 23 ஆட்டோக்கள் குப்பைகளை சேகரிக்க வழங்கப்பட்டன.
கடையம் யூனியன் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார்.ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் டி.கே. பாண்டியன் வரவேற்றார்.திட்ட இயக்குனர் சுரேஷ், கடையம் யூனியன் சேர்மன் செல்லம்மாள், ஆணையாளர் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலை முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆட்டோ வழங்குவதற்கு நமக்கு நாமே திட்டத்தின் மூன்றில் ஒரு பங்கு ரூ.16.50 லட்சம் வழங்கிய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் சோகோ நிறுவனருமான ஸ்ரீதர் வேம்பு பேசுகையில் நமக்கு நாமே திட்டம் நல்ல திட்டம். இதில் அரசு 2 மடங்கும்,சோகோ சார்பில் ஒரு மடங்கு மதிப்பும் அடங்கப்பட்டுள்ளது.
அனைத்து கிராமங்களிலும் இது போன்ற திட்டங்கள் செயல்படுத்தும் போது நகரத்தை தேடி செல்லும் மக்கள் கிராமத்தை தேடி வருவார்கள். கிராமத்தில் தூய்மை தான் முக்கியம். தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டம் முன்மாதிரியான தூய்மையான மாவட்டமாக இருக்க வேண்டும் என்றார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் கூறியதாவது:-
நகரங்களில் குப்பை மேடுகள் உருவாவதை போல் கிராமங்களிலும் தற்போது ஆங்காங்கே குப்பைகள் உருவாகி வருவதை தடுப்பதற்கு மக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும். கடையம் யூனியன் கோவிந்தபேரி ஊராட்சி மன்றம் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து முன் மாதிரியாக சிறப்பாக செயல்படுவது போல மற்ற 22 ஊராட்சி மன்றங்களும் குப்பைகளை பிரித்து பிளாஸ்டிக் இல்லாத யூனியனாக முழுமையான சுகாதாரமான ஊராட்சி யாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் தூய்மையாக மாற்றுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், கடையம் பெரும்பத்து பொன்ஷீலா பரமசிவன்,தெற்கு மடத்தூர் பிரேம ராதா ஜெயம், ரவணசமுத்திரம் முகமது உசேன் ,தெற்கு கடையம் முத்துலட்சுமி ராமதுரை, வெங்கடாம் பட்டி சாருகலா ரவி, ஏ.பி.நாடானூர் அழகுதுரை, துப்பாக்குடி செண்பகவல்லி ஜெகநாதன், மடத்தூர் முத்தமிழ் செல்வி ரஞ்சித்,முதலியார்பட்டி முகைதீன் பீவிஅசன், ஐந்தாங்கட்டளை முப்புடாதி பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் நன்றி கூறினார்.