ராதாபுரம் பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு
- பிராந்தநேரி குளத்திற்கு தண்ணீர் வராததால் பயிர்கள் கருகும் அவலம்
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அறிக்கை
நாகர்கோவில்:
கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தோவாளை கால்வாயில் இருந்து ராதாபுரம் பகுதி பாசனத்திற்கு அரசு நிர்ணயித்த அளவை விட மறைமுகமாக கூடு தல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் அஞ்சுகிராமம் கடைவரம்பு பகுதிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காததால் கன்னிப் பூ சாகுபடி செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். போதுமான தண்ணீர் கிடைக்க வேண்டுமானால், நிலப்பாறை கால்வாயில் தண்ணீர் திறந்து விடவேண்டும். இதன் மூலம் பிராந்தநேரி குளம் நிரம்பும்.
மேலும் எம்.பி. கால்வாய் வழியாக மேட்டு கால்வாயில் தண்ணீர் வந்தால்தான் புதுக்குளம், முதலியார்குளம், மேல கருங்குளம் போன்ற குளங்கள் நிரம்பி அஞ்சுகிராமம் கடைவரம்பு பகுதி விவசாய நிலங்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கும். இதன் மூலம் கன்னிப் பூ சாகுபடியினை விவசாயிகள் மேற்கொள்ள முடியும். தற்போது போதிய தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் நலன் கருதி உடனடியாக நிலப்பாறை கால்வாயில் தண்ணீரை திறந்துவிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.