குமரி மாவட்ட பஸ்-ரெயில் நிலையங்களில் அலைமோதிய மக்கள்
- விடுமுறை முடிந்து குடும்பத்துடன் ஊருக்குப் புறப்பட்டனர்
- முன்பதிவு பெட்டிகளில் பயணிகள் நின்று கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது.
நாகர்கோவில்:
பள்ளிகளுக்கு விடப்பட்ட அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை போன்றவை காரணமாக வெளியூர்களில் வசிக்கும் பலரும், தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்தனர்.
அவர்களது வசதிக்காக சென்னை உள்ளிட்ட பிற ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள், ரெயில்கள் இயக்கப்பட்டன. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பலரும் பணி நிமித்தம் காரணமாக சென்னை, ேகாவை, பெங்களூரு உள்ளிட்ட பல ஊர்களிலும் வசித்து வருகின்றனர்.
அவர்களும் தொடர் விடுமுறையை பயன்படுத்தி குடும்பத்துடன் சொந்த ஊர் வந்து, உறவினர்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை கொண்டாடினர். சுற்றுலா தலங்களுக்கும் சென்று மகிழ்ந்தனர்.
இந்த நிலையில் விடுமுறை முடிந்து விட்டதால், தாங்கள் வசிக்கும் ஊர்களுக்குச் செல்ல அனைவரும் நேற்று புறப்பட்டனர். இதனால், குமரி மாவட்ட ரெயில் நிலையங்கள், பஸ் நிலை யங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
நாகர்கோவிலில் இருந்து வெளியூர் செல்பவர்கள், வடசேரி பஸ் நிலையம் வந்ததால் அங்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. பயணிகளின் நலன் கருதி அரசு போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்ப ட்டன.அதில் பயணம் செய்ய பலரும் முண்டியடித்து ஏறினர்.
இதேபோல் ரெயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. முன்பதிவு செய்தவர்களை விட, முன்பதிவு செய்யாத வர்கள் குடும்பத்துடன் திரண்டு வந்ததால் அவர்கள் அங்கும், இங்கும் இடம் பிடிக்க ஓடிக் கொண்டிருந்தனர்.
நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு இயக்கப்பட்ட ரெயில்கள், சிறப்பு ரெயில்கள் போன்றவற்றில் கூட்டம் அதிகமாக காணப்ப ட்டது. இதனால் முன்பதிவு பெட்டிகளில் பயணிகள் நின்று கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது.