உள்ளூர் செய்திகள்

புல்வாமா தாக்குதலில் பலியான சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய மேயர் மகேஷ். 

புல்வாமா தாக்குதலில் பலியான சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி

Published On 2023-02-14 10:16 GMT   |   Update On 2023-02-14 10:16 GMT
  • என்.சி.சி.மாணவர்கள் கலந்து கொண்டனர்.
  • கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி தாக்குதல் நடந்தது

நாகர்கோவில்:

ஜம்மு காஷ்மீரின் தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் லெத்போராவில் கடந்த 2019-ம்ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

இதில் சி.ஆர்.பி.எப்.வீரர்கள் 40 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனாலேயே ஆண்டுதோறும் பிப்ரவரி 14-ந்தேதி இந்தியாவின் கருப்பு தின மாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை யில் பிப்ரவரி 14-ந்தேதி யான இன்று நாடு முழுவதும் சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இதேபோல் குமரி மாவட்ட ராணுவ வீரர்களின் அமைப்பான ஜவான்ஸ் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சி.ஆர்.பி.எப். வீரர்களின் உருவப்படம் அச்சிடப்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை மற்றும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

அந்த வகையில் கன்னியாகுமரி, மாதவபுரம், குளச்சல், திங்கள்சந்தை, திக்கணங்கோடு, தக்கலை மற்றும் நாகர்கோவில் உள்பட பல இடங்களில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சுமார் 150 ராணுவ வீரர்கள் பங்கேற்று பலியான சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினர்.இதில் என்.சி.சி.மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து வடசேரியில் இருந்து புத்தேரி வரை சாலையின் இருபுறமும் மரக்கன்றுகளை ராணுவ வீரர்கள் நட்டு வைத்தனர்.

Tags:    

Similar News