உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

நாகர்கோவிலில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

Published On 2023-01-25 07:12 GMT   |   Update On 2023-01-25 07:12 GMT
  • செல்போனுக்கு சார்ஜ் போட்டிருந்தபோது பரிதாபம்
  • கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் உள்ள ஜவுளி கடைகள் மற்றும் மீன் வலை நிறுவனங்கள் ஆக்கர் கடைகளில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.

ஒரிசாவை சேர்ந்த தீபெக் (வயது 27) என்பவர் நாகர்கோவில் கோட்டார் வட்டவிளை சானல் கரை பகுதியிலுள்ள ஆக்கர் கடை ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்தார். இவருடன் ஒரிசாவைச் சேர்ந்த மேலும் 3 பேரும் தங்கி இருந்தனர். நேற்று இரவு தீபெக் வேலை முடிந்து ஆக்கர் கடையில் இருந்தார்.

அப்போது அவர் தனது செல்போனுக்கு சார்ஜ் போடுவதற்கு முயன்றார்.இதையடுத்து அந்த பகுதியில் இருந்த மின்பெட்டியில் இருந்து தான் பக்கத்தில் படுத்து இருந்த கட்டில் வரை மின் இணைப்பை நீடித்து செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்பெட்டியில் இருந்து கொண்டுவரப்பட்ட மின்வயரில் இருந்து மின் கசிவு ஏற்பட்டது. இதில் அவர் மீது மின்சாரம் தாக்கியது. உடனே தீபெக் தூக்கி வீசப்பட்டார்.

உடனே சக தொழிலாளர்கள் தீபெக்கை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் தீபெக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தீபெக் பலியான தகவல் ஒரிசாவில் உள்ள அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலியான தீபெக்கின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது.

Tags:    

Similar News